பொழிய தொடங்கியது, தென்மேற்கு பருவமழை


பொழிய தொடங்கியது, தென்மேற்கு பருவமழை
x

தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் தொடங்கி செப்டம்பர் வரை மழை பொழிவை கொடுக்கும்.

சென்னை

தமிழ்நாட்டின் தண்ணீர் தேவையை வடகிழக்கு பருவமழையும், தென்மேற்கு பருவமழையும் பூர்த்தி செய்கிறது. இதில் அதிக மழையை தருவது வடகிழக்கு பருவமழை காலம்தான். தென்மேற்கு பருவமழையை பொறுத்தவரையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களுக்கு அதிக மழையும், மற்ற பகுதிகளுக்கு சொற்ப மழையும் கிடைக்கும். தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் தொடங்கி செப்டம்பர் வரை மழை பொழிவை கொடுக்கும். வட கிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் வரை மழையை தரும்.

தென்மேற்கு பருவமழையால் தமிழ்நாட்டுக்கு அதிக மழை இல்லாவிட்டாலும், கர்நாடகாவில் மழை கொட்டொ கொட்டென்று கொட்டும். இதனால் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை நீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடும். அந்த நீர்தான் மேட்டூர் அணைக்கு வந்து அடைந்து, நிரப்புவதோடு மட்டுமல்லாமல் நிரம்பி வழியவும் செய்யும். இந்த மேட்டூர் அணை தண்ணீர்தான் 9 டெல்டா மாவட்டங்களின் விவசாயத்துக்கு கை கொடுக்கும். எனவேதான் தென்மேற்கு பருவமழை கர்நாடகாவில் பெய்தால் தமிழ்நாட்டின் டெல்டா விவசாயிகள் அதிக மகிழ்ச்சி அடைவார்கள்.

இதுமட்டுமல்லாமல் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களும் தென்மேற்கு பருவமழையை வருகவே, வருகவே என வாழ்த்தி வரவேற்கும். ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை ஜூன் 1-ந்தேதிதான் கேரளாவில் தொடங்கி மெதுவாக மற்ற பகுதிகளுக்கும் பரவி, மழையை கொடுக்கும். ஆனால் இந்த ஆண்டு முன்கூட்டியே அதாவது, 8 நாட்களுக்கு முன்னதாக மே 24-ந் தேதியன்று கேரளாவில் தொடங்கியுள்ளது. கடந்த 16 ஆண்டுகளுக்கு பிறகு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியுள்ளது. பருவமழை தொடங்கியதோடு மட்டுமல்லாமல், மற்ற பகுதிகளிலும் மழை பெருமளவில் பெய்து வருகிறது.

குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள மலைப்பகுதிகளில் ஆரஞ்சு, சிவப்பு எச்சரிக்கைகள் விடப்படும் அளவுக்கு கன மழை பொழிந்து வருகிறது. அந்தவகையில் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் கடந்த 27-ந்தேதி ஒரேநாளில் 35 செ.மீ மழை கொட்டியது. பல இடங்களில் மரங்கள் விழுந்து நிலச்சரிவும் ஏற்பட்டது. சுற்றுலாதலங்கள் மூடப்பட்டு இருந்தன. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை சராசரியைவிட அதிகம் பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தென்மேற்கு பருவமழை காலகட்டத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் இயல்பான மழை அளவு 32.9 செ.மீ ஆகும். இந்த ஆண்டு இதைவிட சற்று அதிகம் மழை பெய்யும். இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், டெல்டா மாவட்டங்களான கடலூர், புதுக்கோட்டை, அரியலூர், கரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் சராசரியாக 17.5 செ.மீ. முதல் 28 செ.மீ. வரைக்கும் மழை பெய்யும் என்று கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் தன் ஆய்வு முடிவுகளாக கணித்துள்ளது.

டெல்டா மாவட்டங்களுக்கு ஏற்கனவே மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்படும். அதோடு இந்த மழையும் வருவதால் விவசாயத்துக்கு நல்ல பலனைக் கொடுக்கும். எப்படி என்றாலும், நீர் மேலாண்மையில்தான் தென்மேற்கு பருவமழையின் முழு பயன்பாடும் கிடைக்கும். தென்மாவட்டங்களில் இந்த மழை தொட்டுக்கோ, துடைத்துக்கோ என்ற அளவில் இயல்பான மழை அளவை எட்டும் என்பதால், அங்கு நீர் மேலாண்மை சற்று சவாலாக இருக்கும்.

1 More update

Next Story