அரசு சேவைகளை இனி எளிதாக பெறலாம்

அரசின் 10 சேவைகளை உடனுக்குடன் வழங்கும் வகையில் “எளிமை ஆளுமை” திட்டம் தமிழக அரசால் சமீபத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
அரசு சேவைகள் மிக எளிமையாகவும், விரைவாகவும் மக்களை சென்றடையும் நோக்கத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் அரசால் வழங்கப்படும் சேவைகளுக்கான நடைமுறைகளை எளிமைப்படுத்தி இணையதளம் மூலமாக உடனுக்குடன் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு "எளிமை ஆளுமை" திட்டத்தை உருவாக்கியுள்ளார். இதற்கு முன்னோடியாக நகர ஊரமைப்புத்துறையில் சுய சான்றிதழ் முறையில் அனைத்து தகவல்களையும் விண்ணப்பதாரரே இணையதளத்தில் பதிவு செய்து, ஒரு நொடியில் திட்ட அனுமதியை பெறக்கூடிய திட்டம் கடந்த 10 மாதங்களாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. சுய சான்றிதழ் திட்டம் அமல்படுத்தப்பட்டதில் இருந்து இதுவரை 85 ஆயிரம் கட்டிட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நகர ஊரமைப்பு இயக்குனர் பா.கணேசன் பெருமையுடன் கூறுகிறார்.
இப்போது அரசின் 10 சேவைகளை உடனுக்குடன் வழங்கும் வகையில் "எளிமை ஆளுமை" திட்டம் தமிழக அரசால் சமீபத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இதில் முதல் சேவை சுகாதார சான்றிதழாகும். ஒரு வளாகத்தில் சுகாதாரத்துக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்பதை உறுதி செய்வதற்கான சான்றிதழ் இது. வழக்கமாக இந்த சான்றிதழ் பெற 3 மாதங்கள் ஆகும். ஆனால் புதிய திட்டத்தின் மூலம் ஒரே நாளில் இதனை பெற்றுவிடமுடியும். இதுபோல பொது கட்டிட உரிமம், பணிபுரியும் மகளிருக்கான தங்கும் விடுதிகள் உரிமம், மகளிர் இல்லங்களுக்கான உரிமம், புன்செய் நிலங்களை விவசாயம் அல்லாத செயல்பாட்டுக்கு பயன்படுத்த தடையின்மை சான்றிதழ், சொத்துமதிப்பு சான்றிதழ், முதியோர் இல்லங்கள் உரிமம், வெள்ளை வகை தொழிற்சாலைகள் பட்டியல் விரிவாக்கம், நன்னடத்தை சான்றிதழ், அரசு ஊழியர்கள் பாஸ்போர்ட் பெறுவதற்கான தடையில்லா சான்றிதழ் ஆகிய சேவைகளை பெறுவதற்கு பல நாட்கள், மாதங்கள், ஏன் ஒரு ஆண்டு கூட ஆகும் நிலைமை இருந்தது.
எளிமை ஆளுமை திட்டத்தின் மூலம் இந்த சேவைகள் ஒரே நாளிலும், சில சேவைகள் உடனடியாகவும் கிடைத்துவிடும். ஏற்கனவே இந்த சேவைகளுக்காக உருவாக்கப்பட்ட மற்றும் மக்கள் விண்ணப்பிக்கும் அதே இணையதளத்தில் இதற்கான சேவைகளையும் பெற்றுக்கொள்ளலாம். பொதுமக்களையும், தொழில் நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து, அவர்கள் பயன்படுத்துவதற்கான சேவைகளை துரிதப்படுத்தவும், தாமதமில்லாமல் வழங்குவதற்காகவும் இந்த திட்டம் செயல்படும். இதன் சிறப்பம்சங்களாக வெள்ளை வகை தொழிற்சாலை பட்டியல் 609 ஆக உயர்த்தப்பட்டுவிட்டது. உரிமங்களுக்கான காலவரையறை நீட்டிக்கப்பட்டுள்ளது. நம்பிக்கை அடிப்படையில் சுய சான்றிதழ் வழங்கப்படுகிறது. இணையதளம் மூலமாக விரைவான ஒப்புதல்கள் வழங்கப்படுவதால் தொழில் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகள் கதவை தட்டுகின்றன.
எளிய நடைமுறை இருப்பதால் அனைத்து தரப்பு மக்களும் எந்தவித சிரமமுமின்றி இனி அரசின் சேவைகளை பெறமுடியும். அரசு அலுவலகங்களில் கால்கடுக்க நின்று காத்திருந்து விண்ணப்பங்களைக் கொடுத்து தாங்கள் கோரிய சான்றிதழ் எப்போது கிடைக்கும்? என்ற நிச்சயமற்றதன்மை இனி இல்லை. அதுபோல கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் அருகில் உள்ள நகரங்களில் இருக்கும் அரசு அலுவலகங்களுக்கு பயணப்படவேண்டிய தேவையும் இல்லை. குடும்பத்தில் யாராவது ஒருவர் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தை அறிந்து வைத்திருந்தால் ஸ்மார்ட் போன் அல்லது லேப்டாப் மூலமாக இந்த சேவையை பெறமுடியும். மேலும் அருகில் உள்ள சேவை மையங்களுக்கு சென்று விண்ணப்பங்களை அனுப்பி சான்றிதழை பெறமுடியும். மொத்தத்தில் அரசின் சேவைகளை மிக எளிதாகவும், துரிதமாகவும் பெற வழிவகை செய்யும் திட்டம்தான் எளிமை ஆளுமை திட்டம்.