ஆட்டத்தை தொடங்கிவிட்ட அரசியல் கட்சிகள்


ஆட்டத்தை தொடங்கிவிட்ட அரசியல் கட்சிகள்
x
தினத்தந்தி 26 July 2025 4:00 AM IST (Updated: 26 July 2025 4:00 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாட்டில் இப்போதே தேர்தல் பரபரப்பு தொடங்கி விட்டது.

சென்னை

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு ஏப்ரல் மாதத்தில் சட்டசபை தேர்தல் நடக்கும் என்றாலும் பிப்ரவரியிலேயே அதற்கான அறிவிப்பு வந்து விடும். அப்படி கணக்குப் பார்த்தால் இன்னும் 7 மாதங்களே இருக்கிறது. தமிழ்நாட்டோடு புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களுக்கும் சட்டசபை தேர்தல் நடக்க இருந்தாலும் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் இப்போதே தேர்தல் பரபரப்பு தொடங்கி விட்டது. தி.மு.க.வை பொருத்தமட்டில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி என்ற முழக்கத்துடன் தேர்தல் பணியினை தொடங்கி இருக்கிறது. உடன்பிறப்பே வா என்ற பெயரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபை தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளை அறிவாலயத்தில் நேருக்கு நேர் சந்தித்து வருகிறார். இதுவரை 39 தொகுதி நிர்வாகிகளை சந்தித்து இருக்கிறார்.

அதேபோல கடந்த 1-ந்தேதி முதல் 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற பெயரில் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து இருக்கிறார். இந்த முகாம்கள் மூலம் 30 சதவீத உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்றும், மொத்தம் 2½ கோடி பேரை தி.மு.க உறுப்பினர்களாக்குவதே நமது இலக்கு எனவும் முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியிருக்கிறார். அதன்படி தி.மு.க. நிர்வாகிகள் வீடு, வீடாக உறுப்பினர்கள் சேர்க்கையை தீவிரப்படுத்தி இருக்கின்றனர். இந்த முகாம் ஆகஸ்ட் மாதம் 15-ந்தேதி வரை நடக்க இருக்கிறது.

அ.தி.மு.க.வைப் பொருத்தமட்டில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி 'மக்களைக் காப்போம்- தமிழகத்தை மீட்போம்' என்ற முழக்கத்தை அடிப்படையாக வைத்து 234 சட்டசபை தொகுதிகளுக்கும் பயணத்தை தொடங்கி விட்டார். இதற்காக ஜெயலலிதாவுக்கு பிடித்த பச்சை நிறத்தில் அனைத்து வசதிகளையும் கொண்ட ஒரு பிரசார பேருந்தை தயார் செய்து கடந்த 7-ந்தேதி கோவை மேட்டுப்பாளையத்தில் தன்னுடைய பிரசாரத்தை தொடங்கி விட்டார். பேருந்தில் இருந்தே பிரசாரம் என்பது மட்டுமல்லாமல் மக்கள் மத்தியிலும் பேசுகிறார். ரோடு ஷோவிலும் கலந்து கொள்கிறார். ஆங்காங்கு வயல்களில் வேலை பார்க்கும் ஆண்கள், பெண்களை சந்தித்து பேசுகிறார். செல்லும் இடங்களில் எல்லாம் ஒவ்வொரு பிரிவினரையும் தனித்தனியாக சந்தித்து பேசுகிறார்.

சீமானைப் பொருத்தவரை எப்போதுமே நான் தனித்துதான் போட்டி, எனக்கு எதிராளி என்றால் ஏ, பி, சி, டி அதாவது அ.தி.மு.க, பா.ஜனதா, காங்கிரஸ், தி.மு.க. ஆகிய கட்சிகள் தான் என்ற உறுதிப்பாட்டில் இருக்கிறார். அவர் இப்போது விஜயையும் அந்த பட்டியலில் சேர்த்துவிட்டார். அவரும் தனது பயணத்தை மட்டுமல்லாமல் வேட்பாளர் தேர்வையும் தொடங்கி விட்டார். நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை பொருத்தமட்டில் த.வெ.க. தலைமையில்தான் கூட்டணி என்றும், விஜய் தான் முதல்-அமைச்சர் வேட்பாளர் என்பதிலும் உறுதியாக இருக்கிறார்கள். ஏற்கனவே விக்கிரவாண்டியில் முதல் மாநாட்டை நடத்திய அவர் அடுத்த மாநாட்டை மதுரையில் ஆகஸ்ட் 25-ந்தேதி நடத்துகிறார். தொடர்ந்து செப்டம்பர் முதல் மக்கள் சந்திப்பையும் நடத்த இருக்கிறார்.

அன்புமணி ராமதாசும், தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் என்று மக்களை சந்திக்கும் 100 நாள் பயணத்தை தொடங்கிவிட்டார். ஆக அனைத்து கட்சிகளும் களத்தில் இறங்கியுள்ளன. ஒரு பக்கம் கூட்டணி அமைக்கும் வேலையும், மற்றொரு பக்கம் வாக்காளர்களை கவரும் வேலையும் தொடங்கிவிட்டது. ஆக ஆட்டம் தொடங்கி விட்டது. வெற்றி பெறப்போவது யார்? என்பது மக்களின் கையில்தான் இருக்கிறது.

1 More update

Next Story