அரசியல் வேறு; விளையாட்டு வேறு!

பரிசு கோப்பை இல்லாமல் இந்திய அணி வெற்றியை கொண்டாடியது விளையாட்டு உணர்வு அல்ல.
ஒலிம்பிக் விளையாட்டு தொடங்கப்பட்டதன் நோக்கமே அப்போது ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே இருந்த போர் பதற்றத்தை தணித்து, அமைதியை நிலைநாட்டத்தான். என்னதான் பகை நாடுகளாக இருந்தாலும் மைதானத்துக்குள் இறங்கிவிட்டால் அவர்கள் வீரர்கள் என்ற ஒரே குடைக்கு கீழ் வந்துவிடுவார்கள். அவர்களுக்குள் போட்டி இருக்கலாமே தவிர, பகைமை இருக்கக்கூடாது. ஆனால் சமீபத்தில் துபாயில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த ஆசிய கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் இந்த உணர்ச்சியெல்லாம் மங்கிப்போய் பகைமை உணர்வு மேலோங்கி இருந்தது. இந்தியாவும், பாகிஸ்தானும் லீக் சுற்று, சூப்பர் 4 சுற்று மற்றும் இறுதிப்போட்டியில் மோதின. எந்த விளையாட்டு என்றாலும், அது தொடங்குவதற்கு முன்பு இரு அணி கேப்டன்களும் கை கொடுத்துக்கொள்வார்கள்.
ஆட்டம் முடிந்தவுடன் மீண்டும் இரு அணி வீரர்களும் கைகொடுத்து வாழ்த்துகளை பறிமாறிக்கொள்வார்கள். ஆனால் நடந்து முடிந்த முதல் ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், பாகிஸ்தான் அணி கேப்டன் சல்மான் ஆஹாவுக்கு கைகொடுக்க மறுத்துவிட்டார். இதை சற்றும் எதிர்பாராத பாகிஸ்தான் அணி வீரர்கள் அதையே பிடித்துக்கொண்டனர். இதுமட்டுமல்லாமல் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றவுடன் இந்திய அணியின் கேப்டன், நாங்கள் பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவாக நிற்கிறோம். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய பாதுகாப்பு படையினருக்கு இந்த வெற்றியை அர்ப்பணிக்கிறோம் என்று சொன்னது பாகிஸ்தான் அணியினருக்கு கடும் ஆத்திரத்தை கிளப்பியது.
இதற்காக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் புகார் அளித்தனர். தொடர்ந்து அடுத்த போட்டியில் இரு அணிகளும் சந்தித்தபோது பாகிஸ்தான் அணி வீரர்கள் இந்திய அணியினரை சீண்டும் வகையில் சில செயல்களை செய்தனர். பாகிஸ்தான் அணி வீரரான ஹாரிஸ் ரவுப், சகிப் சதா பர்ஹான் ஆகியோர் இந்திய விமானப்படையின் 6 போர் விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியது போல சைகை காட்டும் வகையில் 6 விரல்களை காட்டியும், கிரிக்கெட் மட்டையை துப்பாக்கி போல நீட்டிக்காட்டியும் இந்திய வீரர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தினர். இந்த கோப உணர்வுகளை மனதில் வைத்துக்கொண்டே இரு நாட்டு அணியினரும் இறுதி போட்டியில் மோதினர். இதில் இந்தியா அபார வெற்றி பெற்று 9-வது முறையாக மகுடம் சூடியது. பரிசளிப்பு விழா நடந்தபோது ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர்தான் கோப்பையை வழங்குவது மரபு.
அந்த பதவியை வகிக்கும் பாகிஸ்தான் உள்துறை மந்திரி மொசின் நக்வி, கோப்பையை இந்திய அணியிடம் வழங்குவதற்கு தயாராக இருந்தார். ஆனால் இந்திய அணியினர் அந்த பக்கமே வரவில்லை. நாங்கள் அமீரக கிரிக்கெட் வாரிய துணை தலைவர் கலீத் அல் ஜருனிடம் வாங்கிக்கொள்கிறோம் என்று இந்திய அணியினர் சொன்னதை பாகிஸ்தான் மந்திரி ஏற்றுக்கொள்ளாமல் கோப்பையை தூக்கிக்கொண்டு சென்றுவிட்டார். ஆக பரிசு கோப்பை இல்லாமல் இந்திய அணி வெற்றியை கொண்டாடியது. இது விளையாட்டு உணர்வு அல்ல. பகைமையை இரு அரசாங்கங்களும், படைகளும் பார்த்துக்கொள்ளுமே தவிர விளையாட்டு மைதானத்தில் இரு நாட்டு அணிகளும் அதனை பிரதிபலித்தது ஏற்புடையது அல்ல. விளையாட்டு என்பது நாடுகளின் நட்புறவில் ஒன்று சேர்க்கும் பாலமாக இருக்கவேண்டுமே தவிர இரு நாடுகளையும் பிரிக்கும் சுவராக ஆகிவிடக்கூடாது. அரசியலை இரு நாடுகளும் பார்த்துக்கொள்ளட்டும், அது விளையாட்டு மைதானத்தில் வேண்டாம். போர் என்பது போர்க்களத்தில்தானே தவிர விளையாட்டு களத்தில் அல்ல.






