வரியிலும் சில வரவு


வரியிலும் சில வரவு
x

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீதம் முதல் 49 சதவீதம் வரை பரஸ்பர வரி விதிப்பை டிரம்ப் அறிவித்தார்.

Some revenue from taxesஅமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றப்பிறகு எல்லா நாடுகள் மீதும் பரஸ்பர வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் பிரகடனப்படுத்தினார். பிரதமர் மோடி அமெரிக்கா சென்று பேச்சுவார்த்தை நடத்திய பிறகும் அவருடைய நிலைப்பாட்டில் மாற்றம் தெரியவில்லை. இதைத்தொடர்ந்து மத்திய வர்த்தக மந்திரி பியூஷ் கோயல் தலைமையிலான குழு அமெரிக்கா சென்றும், அமெரிக்காவில் இருந்து உதவி வர்த்தக பிரதிநிதியான பிரெண்டன் லிஞ்ச் தலைமையிலான குழு இந்தியா வந்தும் பேச்சுவார்த்தை நடத்தின. அதேவேளையில் இந்தியா மின்சார வாகனங்களின் உற்பத்திக்கு தேவையான 35 மூலப்பொருட்களுக்கும், செல்போன் உற்பத்திக்கு தேவையான 28 பொருட்களுக்கும் இனி இறக்குமதி வரி இல்லையென்று அறிவித்தது.

இவ்வளவு இருந்தும் ஏப்ரல் 2-ந்தேதி பரஸ்பர வரியை அறிவிப்பேன் என்று கூறியபடி, அனைத்து நாடுகளிலும் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீதம் முதல் 49 சதவீதம் வரை பரஸ்பர வரி விதிப்பை டிரம்ப் அறிவித்தார். இந்தியாவை பற்றி குறிப்பிடும்போது, 'இந்தியா மிக கடினமானது. இந்திய பிரதமர் இப்போதுதான் அமெரிக்கா வந்து திரும்பியிருக்கிறார். அவர்கள் அமெரிக்காவை சரியான முறையில் நடத்தவில்லை. அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கு 52 சதவீதம் வரி விதிக்கிறார்கள்' என்று கூறிவிட்டு, 'ஒவ்வொரு நாடும் தங்கள் பொருட்களுக்கு என்னென்ன வரி விதிக்கிறது?' என்று சொல்லிக்கொண்டே அமெரிக்கா விதிக்கப்போகும் வரியை அறிவித்தார்.

அந்தவகையில், இந்திய பொருட்களுக்கு 27 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதுபோல சீனாவுக்கு 34 சதவீதம், ஜப்பானுக்கு 24 சதவீதம், தாய்லாந்துக்கு 36 சதவீதம், வங்காளதேசத்துக்கு 37 சதவீதம், மலேசியாவுக்கு 24 சதவீதம், தைவானுக்கு 32 சதவீதம், தென்கொரியாவுக்கு 26 சதவீதம், வியட்நாமுக்கு 46 சதவீதம் விதிக்கப்படும் என்று அறிவித்தார். இது அமெரிக்காவின் பொற்காலம். இந்த வரி பல நிறுவனங்களை இனி அமெரிக்காவில் தங்கள் உற்பத்தியை தொடங்க ஊக்குவிக்கும் என்றார்.

இந்தியாவை பொருத்தமட்டில் இந்த 27 சதவீதம் சில பாதகங்களை ஏற்படுத்தினாலும் பல நன்மைகளையும் தந்துள்ளது. சீன பொருட்கள் மீது 34 சதவீதம் வரி விதித்து இருப்பதால் அமெரிக்க சந்தையில் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஜவுளி, ஆடைகள், காலணிகளுக்கு நல்ல கிராக்கி இருக்கும்.

இதுபோல இரும்பு மற்றும் ஸ்டீல் பொருட்களும் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட வாய்ப்பு இருக்கிறது. மேலும் அதிக வரிக்கு உள்ளாகிய சீனா மட்டுமல்லாமல் வியட்நாம் போன்ற பல நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களோடு விலையில் இந்தியா போட்டியிடமுடியும்.

எனினும் இப்போது அமெரிக்காவுக்கு 14 பில்லியன் டாலர் (ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்து 756 கோடி) அளவுக்கு செய்யப்படும் மின்னணு பொருட்கள் ஏற்றுமதியிலும், 9 பில்லியன் டாலர் (ரூ.77 ஆயிரத்து 16 கோடி) அளவுக்கு விலை உயர்ந்த கற்கள், நகைகள் ஏற்றுமதியும் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.

ஏற்கனவே 25 சதவீத வரி அறிவிக்கப்பட்ட மோட்டார் வாகன உதிரிபாகங்கள், அலுமினிய பொருட்களுக்கு இந்த 27 சதவீத வரி பொருந்தாது. இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இப்படி சாதக, பாதகங்கள் இரண்டும் கொண்ட கலவையான 27 சதவீத வரியை குறைக்க மத்திய அரசாங்கம் அமெரிக்காவோடு பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்கவேண்டும் என்பதே பொதுவான கோரிக்கையாக இருக்கிறது.

1 More update

Next Story