தமிழ்நாடு உயருகிறது!


தமிழ்நாடு உயருகிறது!
x
தினத்தந்தி 17 Sept 2025 2:45 AM IST (Updated: 17 Sept 2025 2:46 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு முழுவதும் பரவலாக புதிய தொழில்கள் தொடங்கப்பட்டு வருகின்றன.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தவுடனேயே “தமிழ்நாட்டை 2030-க்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் அதாவது, ரூ.88 லட்சம் கோடி பொருளாதார வளர்ச்சி கொண்ட மாநிலமாக ஆக்கிக்காட்டித்தீருவேன்” என்று சூளுரைத்து முன்னேற்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். கோட்டையில் அவரது அறையில் தன்னுடைய இருக்கைக்கு எதிரில் வைக்கப்பட்டுள்ள “டேஷ் போர்டில்’’ தினமும் தமிழ்நாட்டின் தொழில், பொருளாதார வளர்ச்சி உள்பட அரசின் அனைத்து பணிகளையும் பார்த்து ஆய்வுநடத்தி வருகிறார். தமிழ்நாட்டுக்கு தொழில்முதலீடுகளை ஈர்க்க அவ்வப்போது தொழில்அதிபர்களை சந்தித்து புதிய தொழிற்சாலைகளை தொடங்க அழைப்புவிடுத்து வருகிறார். தமிழ்நாட்டில் தொழில்தொடங்க முன்வருபவர்களுக்கு அரசின் சார்பில் நிறைய ஊக்கச்சலுகைகள், வரிச்சலுகைகள் அளிக்கப்படுவதாலும், இங்கு தொழில்அமைதி இருப்பதாலும், தொழிலாளர்களால் தேவையற்ற இடையூறு இல்லாமல் இருப்பதாலும் இந்தியாவில் உள்ள முன்னணி நிறுவனங்கள் மட்டுமல்லாமல், வெளிநாட்டு நிறுவனங்களும் தொழில்தொடங்க தேடிவருகிறார்கள்.

முன்பெல்லாம் சென்னையைச்சுற்றி மட்டும் தொழில்கள் தொடங்கப்பட்ட நிலையில், இப்போது தமிழ்நாடு முழுவதும் பரவலாக புதிய தொழில்கள் தொடங்கப்பட்டு வருகின்றன. கடந்த மாதத்தில்கூட தூத்துக்குடியில் வியட்நாம் நாட்டைச்சேர்ந்த மின்சாரகார்கள் தயாரிக்கும் “வின்பாஸ்ட்’’ நிறுவனத்தின் தொழிற்சாலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். அந்த சூட்டோடு சூட்டாக “டி.என். ரைசிங்’’ அதாவது, தமிழ்நாடு உயருகிறது என்ற லோகோவை வைத்துக்கொண்டு ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து தொழில்அதிபர்களை சந்தித்து பேசியதன் விளைவாக ஜெர்மனியில் ரூ.7,020 கோடி முதலீட்டுடன் 15,320 பேருக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கும் வகையிலான 26 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுவிட்டு இங்கிலாந்து பயணமானார். அங்கும் ரூ.8,496 கோடி முதலீட்டில் 2,293 பேருக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கும் வகையிலான 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுவிட்டு வெற்றிகரமாக தமிழ்நாடு திரும்பினார்.

தமிழ்நாட்டுக்கு வந்தபிறகும் கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு சென்றார். அங்கு ஓசூரில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.23,303.15 கோடி முதலீட்டில் 44,870 பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கிடும்வகையில் 53 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்கள் அதாவது, எம்.எஸ்.எம்.இ. சார்பில் ரூ.1,003.85 கோடி முதலீட்டில் 4,483 பேருக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கும் வகையில், 39 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் என மொத்தம் ரூ.24 ஆயிரத்து 307 கோடி முதலீட்டில் 49,353 பேருக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கும் வகையிலான 92 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் ஒரேநாளில் கையெழுத்திட வைத்துவிட்டுள்ளார். இதுமட்டுமல்லாமல், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குருபரபள்ளி சிப்காட் தொழிற்பூங்காவில் மின்சாரவாகனங்களுக்கு தேவையான உதிரிபாகங்களை தயாரித்து முன்னணியில் உள்ள 5 பெரியநிறுவனங்களுக்கு சப்ளை செய்யும் தைவான் நாட்டைச்சேர்ந்த டெல்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் விரிவாக்கத்தில் 2 புதியதொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

இப்படி எல்லா இடங்களிலும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடப்படுகிறதே, இதில் எத்தனை புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்வடிவம் பெற்று தொழிற்சாலைகளாக உருவெடுக்க தொடங்குகின்றன, எத்தனை தொழிற்சாலைகளில் உற்பத்தி தொடங்கியிருக்கிறது என்று எழும் விமர்சனங்களுக்கு ஓசூரில் நடந்த மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுவரை கையெழுத்திடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 77 சதவீத புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டுக்கு வந்திருக்கிறது என்று முதல்வகுப்பில் தேர்ச்சி அடைந்த செய்தியை முத்தாய்ப்பாக தெரிவித்தார். 77 சதவீதம் செயல்வடிவத்துக்கு வந்து இருக்கிறது என்பது நிச்சயம் பாராட்டவேண்டிய செய்தியாகும். இதுபோல தமிழ்நாடு உயருகிறது என்று ஊர் உலகம் பாராட்டும் வகையில் 77 சதவீதம் என்பது இன்னும் பல வெற்றிகளை பெறவேண்டும் என்பதுதான் தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

1 More update

Next Story