பிரதமரால் பாராட்டப்பட்ட தமிழக, கேரள வீராங்கனைகள்

பெண் கடற்படை அதிகாரிகள், 238 நாட்கள் தன்னந்தனியே பாய்மர படகில் 47,500 கிலோ மீட்டர் தூரம் உலகை சுற்றி வந்தனர்.
நவராத்திரி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. “காளையருக்கு ஓர் இரவு சிவராத்திரி, ஆனால் கன்னியருக்கு 9 நாள் நவராத்திரி” என்று பழைய திரைப்படத்தில் ஒரு பாடல் உண்டு. ஆக இந்த 9 நாட்களும் பெண்களுக்கு மட்டுமே உரித்தான நாட்களாகும். இந்த நாட்களில்தான் பெண்கள் வீடுகளில் கொலு வைப்பார்கள். முதல் 3 நாட்கள் துர்க்கை அதாவது வீரம், சக்திக்குரியது. அடுத்த 3 நாட்கள் லட்சுமி, செல்வத்துக்குரியது. கடைசி 3 நாட்கள் சரஸ்வதி கல்விக்குரியது. பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது 126-வது மனதின் குரல் நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடம் ரேடியோவில் உரையாற்றினார். அப்போது அவர் நவராத்திரியை பற்றி மிக மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
இந்த முறை மனதின் குரல் நிகழ்ச்சியில், 238 நாட்கள் தன்னந்தனியே பாய்மர படகில் 47,500 கிலோ மீட்டர் தூரம் உலகை சுற்றி வந்த பெண் கடற்படை அதிகாரிகள் லெப்டினன்ட் கமாண்டர்கள் தில்னா மற்றும் ரூபா ஆகியோர் பற்றி சொன்னது மட்டுமல்லாமல், அவர்களுடன் பேசி சவாலான துணிச்சல்மிக்க பயண அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டார். அவர்களை பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், எந்த மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்பது குறித்து கேட்டு அவர்களின் சொந்த மாநிலங்களுக்கும் பெருமை சேர்த்தார்.
லெப்டினன்ட் கமாண்டர் தில்னா கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்தவர். அவருடைய தந்தை ராணுவத்தில் பணியாற்றியவர். கணவர் கடற்படை அதிகாரி என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். லெப்டினன்ட் கமாண்டர் ரூபா தனது தந்தை தமிழ்நாட்டை சேர்ந்தவர். தாயார் புதுச்சேரியை சேர்ந்தவர் என்றும், தந்தை விமானப்படையில் பணியாற்றியவர் என்றும் பெருமைப்பட கூறினார். ஆக இந்த இரண்டு அதிகாரிகளும் தங்களின் சொந்த மாநிலமான தமிழ்நாட்டுக்கும், கேரளாவுக்கும் பெருமை சேர்த்துவிட்டனர். பிரதமருடன் பேசும்போதுதான் அவர்களின் சாதனை உலகுக்கு தெரிந்தது. தென் பசிபிக் பெருங்கடலில் பாயிண்ட் நெமோ என்ற இடம் இருக்கிறது. லத்தீன் மொழியில் நெமோ என்பதற்கு மனித சஞ்சாரமே இல்லாத இடம் என்று பொருள். உலகின் எந்த நிலப்பகுதியில் இருந்தும் இது மிகவும் தூரமாக உள்ள ஒரு கடல் பகுதியை குறிக்கிறது. இந்த இடத்துக்கு இதுவரை பாய்மர படகில் யாருமே சென்றதில்லை. முதலில் சென்றவர்கள் நமது பெண் அதிகாரிகள் தில்னாவும், ரூபாவும்தான்.
இந்த இடத்துக்கு பக்கத்தில் தீவுகளோ, நாடுகளோ எதுவுமே இல்லை. பக்கத்தில் யாராவது மனிதர்கள் இருக்கிறார்கள் என்றால் அது 400 கிலோ மீட்டர் உயரத்தில் விண்ணில் சுற்றிக்கொண்டு இருக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள மனிதர்கள்தான். கடைசியாக ரூபா, தங்களின் சாதனையை குறிப்பிடும்போது பாய்மர படகில் உலகை சுற்றி வந்தவர்களின் எண்ணிக்கை எவரெஸ்ட் சிகரத்தை எட்டிப்பிடித்தவர்களை விடவும், விண்வெளிக்கு சென்றவர்களை விடவும் குறைவு என்று கூறி, மோடியிடம் பாராட்டை பெற்றார். கடும் குளிர், மழை, வெயில் ஆகியவற்றையெல்லாம் எதிர்கொண்டு 17 மீட்டர் நீளம் 5 மீட்டர் அகலமுள்ள பாய்மர படகில் சில நேரம் 7 அடுக்கு உடைகளை அணிந்து பயணம் செய்த அனுபவத்தை ரூபா கூறியது மெய் சிலிர்க்க வைத்தது. இந்த 2 பெண் சிங்கங்களையும் பிரதமரோடு சேர்ந்து நாடே பாராட்டுகிறது.






