ஆசிரியர்களுக்கு ‘டெட்’ தேர்வு தீர்ப்பு தந்த அதிர்ச்சி


ஆசிரியர்களுக்கு ‘டெட்’ தேர்வு தீர்ப்பு தந்த அதிர்ச்சி
x

ஆசிரியர் தகுதி தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றால்தான் ஆசிரியர்கள் பணியில் தொடரமுடியும் என்ற நிலை இருக்கிறது.

சென்னை

"ஆசிரியர் பணியே அறப்பணி; அதற்கு உன்னை அர்ப்பணி" என்பது ஆசிரிய பணியின் மேன்மையைப் பற்றி காலங்காலமாக சொல்லப்பட்டு வரும் நன்மொழி. அதனால்தான் மாதா, பிதா, குரு, தெய்வம் என்று ஆசிரியர்களை தெய்வத்துக்கு இணையாக சொல்கிறார்கள். வாழ்க்கையில் ஒவ்வொருவரையும் நல்ல வழிக்கு கொண்டுவர செதுக்கும் சிற்பிகள் அவர்கள். எனவே ஆண்டுதோறும் செப்டம்பர் 5-ந்தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு ஆசிரியர்கள் கவுரவப்படுத்தப்படுகிறார்கள்.

இந்த நிலையில் இலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டம் 2009-ன் கீழ், 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு கற்றுக்கொடுக்கும் இடைநிலை ஆசிரியர்களும், 6 முதல் 8-ம் வகுப்பை சொல்லிக்கொடுக்கும் பட்டதாரி ஆசிரியர்களும் ஆசிரியர் தகுதித்தேர்வு என்று கூறப்படும் ‘டெட்’ தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும். அவ்வாறு வெற்றிபெறுபவர்கள் மட்டுமே ஆசிரியர் பணியில் சேரமுடியும் என்று ஒரு சட்டம் நாடு முழுவதும் கொண்டு வரப்பட்டது. இதற்கு அப்போதே பலத்த எதிர்ப்பு கிளம்பியது. ஒரு ஆசிரியர் எத்தனை தேர்வுதான் எழுதுவார். ஏற்கனவே பிளஸ்-2 அல்லது பட்டப்படிப்பின்போது தேர்வு எழுதிய பிறகுதான் ஆசிரியர் பயிற்சி கல்வியில் சேருகிறார். பின்னர் அங்கும் தேர்வை எழுதி ஆசிரியர்களுக்கான தகுதியை பெறுகிறார்கள். அதன் பின்னரும், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டித்தேர்வில் வெற்றி பெற்ற பின்னரே பணியில் சேரமுடியும் என்ற நிலை இருக்கும்போது, இன்னொரு தேர்வு தேவையா? என்று ஆசிரியர் சமுதாயத்தில் எதிர்ப்புகள் கிளம்பின. என்றாலும் ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே ஆசிரியர்களாக அப்போது முதல் தற்போது வரை நியமிக்கப்பட்டு வருகிறார்கள்.

இப்போது சுப்ரீம் கோர்ட்டு அளித்து இருக்கும் தீர்ப்பு, 2012-க்கு முன்பு பணியில் சேர்ந்தவர்களும் கண்டிப்பாக ஆசிரியர் தகுதித்தேர்வை எழுதி வெற்றி பெற்றால்தான் ஆசிரியர்களாக பணியில் தொடரமுடியும் என்று வரையறுத்துவிட்டது. 55 வயதுக்குமேல் அதாவது, ஓய்வுபெற 5 ஆண்டுகள் இருப்பவர்கள் மட்டும் இந்த தேர்வை எழுத விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மற்றவர்கள் அனைவரும் இந்த தேர்வை எழுதவேண்டும். அப்படி இல்லையென்றால், வேலையில் இருந்து விலகும் வகையில் விருப்ப ஓய்வை பெற்றுவிடவேண்டும் என்று கூறிய நீதிபதிகள் சிறுபான்மையினர் பள்ளிக்கூடங்களில் வேலைபார்க்கும் ஆசிரியர்களுக்கு இந்த தீர்ப்பு பொருந்துமா? என்பது குறித்து சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தலைமையில் 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பு ஆசிரியர்களுக்கு அதிர்ச்சியையும், பேரிடியையும் கொடுத்துள்ளது. 54 வயதுள்ள ஒரு ஆசிரியர் தகுதி தேர்வை எழுத வேண்டும் என்றால், அது சாத்தியமா? என்பது ஆசிரியர்களின் கோரிக்கையாக இருக்கிறது. தமிழ்நாட்டில் இந்த தீர்ப்பு மூலம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ஆசிரியர்கள் இந்த ஆசிரியர் தகுதி தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றால்தான் பணியில் தொடரமுடியும் என்ற நிலை இருக்கிறது. இந்த தீர்ப்பை மறுஆய்வுசெய்ய சுப்ரீம் கோர்ட்டை நாடலாமா? அல்லது எளிதான ஒரு தேர்வை நடத்தி அனைவரையும் தேர்வுசெய்ய வைக்கலாமா? என்பதை தமிழக அரசின் கல்வித்துறை முடிவு செய்யவேண்டும் என்பது ஆசிரியர்களின் கோரிக்கையாக இருக்கிறது. இதற்கிடையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு குறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசிப்போம். ஆசிரியர்களை கைவிட்டுவிடமாட்டோம். ஆசிரியர்களை அரவணைப்பதற்கான அத்தனை சாத்தியக்கூறுகளையும் செய்ய காத்திருக்கிறோம் என்று கூறியுள்ளார். இது ஆசிரியர்களுக்கு சற்று மனநிம்மதியை கொடுத்திருக்கிறது.

1 More update

Next Story