டித்வா புயலின் வேகம் குறைந்தது - வானிலை ஆய்வு மையம் தகவல்


டித்வா புயலின் வேகம் குறைந்தது - வானிலை ஆய்வு மையம் தகவல்
x
தினத்தந்தி 28 Nov 2025 5:27 PM IST (Updated: 28 Nov 2025 5:29 PM IST)
t-max-icont-min-icon

சென்னைக்கு 510 கிலோ மீட்டர் தொலைவில் புயல் நிலை கொண்டுள்ளது.

சென்னை

நேற்று தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளில் நிலவிய 'டித்வா' புயல் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலையில் இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது.

டித்வா புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும் புயல் காரணமாக இன்று தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மணிக்கு 4 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்த டித்வா புயலின் வேகம் தற்போது 3 கிலோ மீட்டராக குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது புயலானது இலங்கை திரிகோண மலையிலிருந்து தெற்கே சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவிலும், இலங்கை மட்டக்களப்பிலிருந்து வடமேற்கே 120 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுவையிலிருந்து தென்கிழக்கே 410 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து தென்கிழக்கே 510 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டித்வா புயல் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளை கடந்து, 30-ம்தேதி அதிகாலை, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடதமிழகம் புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அருகே நிலவக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story