தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் எப்படி இருக்கும்? - வானிலை ஆய்வு மையம் விளக்கம்

எத்தனை புயல் உருவாகும் என இப்போது சொல்ல முடியாது என வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் அமுதா கூறினார்.
சென்னை,
தென்மேற்கு பருவமழை இன்று இந்திய பகுதிகளிலிருந்து விலகி வடகிழக்கு பருவமழை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகள், கேரளா - மாஹே, தெற்கு உள்கர்நாடகம், ராயலசீமா, கடலோர ஆந்திர பிரதேச பகுதிகளில் இன்று தொடங்கி உள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இன்று முதல் 22-ம் தேதி வரை மிதமான மழை முதல் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்து இருந்தது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் அமுதா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
வழக்கமாக அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் தான் வடகிழக்கு பருவமழை தொடங்கும். அதன்படி, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியுள்ளது. இந்த வருடம் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 50 செ.மீ. அதிகம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக காயல்பட்டணம், திருச்செந்தூரில் தலா 15 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 3 நாட்கள் கனமழை பெய்யக்கூடும். 18-ம் தேதி (நாளை மறுநாள்) தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. அதனை தொடர்ந்து 24-ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். எத்தனை புயல் உருவாகும் என இப்போது சொல்ல முடியாது.
விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தேனி, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிக கனமழை பெய்யும். மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், மாவட்டங்களில் கனமழை பெய்யும். இவ்வாறு அவர் கூறினார்.






