காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?

காலை 10 மணி வரை குறிப்பிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மத்திய ஆந்திர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (23-09-2025) வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் தமிழகத்தின் 7 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, நீலகிரி, கன்னியாகுமரி, தென்காசி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் உள்ள மலைப்பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சென்னையில் நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், எழும்பூர் உள்ளிட்ட இடங்களில் நேற்று இரவு முதல் மிதமான மழை பெய்து வருகிறது. மேலும் திருவேற்காடு, போரூர், வானகரம், ஆலப்பாக்கம், வளசரவாக்கம், பூந்தமல்லி, குமணண்சாவடி, திருமழிசை, செம்பரம்பாக்கம், மாங்காடு, குன்றத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மிதமான மழை பெய்து குளிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது






