வங்காளதேசம்: 3 வாரங்களில் கும்பல் தாக்குதலில் 6-வது இந்து படுகொலை

24 மணிநேரத்தில், 2-வது இந்து தொழிலதிபர் ஒருவர் கொல்லப்பட்டு உள்ளார்.
டாக்கா,
வங்காளதேசத்தில் கடந்த 2024-ம் ஆண்டு ஜூலையில் அப்போது பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சிக்கு எதிராக மாணவர் போராட்டம் வெடித்தது. இதில், ஆளும் அரசு கவிழ்ந்தது. ஷேக் ஹசீனா பதவி விலகியதுடன், அதே ஆண்டு ஆகஸ்டு 5-ந்தேதி சகோதரியுடன் நாட்டை விட்டு வெளியேறினார். அவர் இந்தியாவில் தஞ்சமடைந்து உள்ளார்.
இதன் பின்னர், நோபல் பரிசு பெற்ற, பேராசிரியர் முகமது யூனுஸ் தலைமையில் வங்காளதேசத்தில் இடைக்கால அரசு அமைந்தது. நாட்டின் தலைமை ஆலோசகராக யூனுஸ் செயல்பட்டு வருகிறார். அடுத்த மாதம் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை மாதம் கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களின் முக்கிய தலைவராக இருந்தவர்களில் ஷெரீப் உஸ்மான் ஹாதி (வயது 32) என்பவரும் ஒருவர். இங்குலாப் மாஞ்சா என்ற அமைப்பை நிறுவி அரசியலில் ஈடுபட்டார். தலைநகர் டாக்காவின் பிஜோய்நகர் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த அவரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பினர்.
இந்நிலையில், சிங்கப்பூரில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், சில நாட்களில் உயிரிழந்து விட்டார். டிசம்பர் மத்தியில் ஏற்பட்ட அவருடைய மரணம் தொடர்ச்சியாக வங்காளதேசத்தில் வன்முறை வெடித்தது.
இதில், முன்னாள் கல்வி மந்திரி மொகிபுல் ஹசன் சவுத்ரியின் வீடு கொளுத்தப்பட்டது. வங்காளதேசத்தின் நிறுவன தந்தையான ஷேக் முஜிபுர் ரகுமானின் வீடும் சூறையாடப்பட்டது. இந்திய துணைத்தூதரின் வீடு மீதும் கல்வீச்சு சம்பவம் நடந்தது.
இதன் தொடர்ச்சியாக அந்நாட்டில் வசிக்கும் இந்துக்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், வங்காளதேசத்தின் நர்சிங்டி நகரில் சர்சிந்தூர் பஜார் பகுதியில் மளிகை கடத்தி நடத்தி வந்தவர் மோனி சக்ரவர்த்தி (வயது 40). நேற்றிரவு கடையை அடைத்து விட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்த அவரை மர்ம கும்பல் ஒன்று ஆயுதங்களால் கடுமையாக தாக்கியது.
இதில் சம்பவ இடத்திலேயே படுகாயமடைந்த அவர் உயிரிழந்து விட்டார் என அக்கம்பக்கத்தினர் மற்றும் போலீசார் தெரிவித்தனர். மதன் தாக்குர் என்பவரின் மகனான மோனி அந்த பகுதியில் மிக அமைதியானவர் என்றும், பிரபல தொழிலதிபராக இருந்து வந்தவர் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவருக்கு அன்தாரா என்ற மனைவியும், 12 வயதில் அபிக் சக்ரவர்த்தி என்ற மகனும் உள்ளனர். இவர், கடந்த டிசம்பர் இறுதியிலேயே, எங்களுடைய பகுதியில் வன்முறை பரவி வருகிறது. தீக்காடாக உள்ளது என பேஸ்புக்கில் தெரிவித்து இருக்கிறார்.
அதற்கு சில மணிநேரத்திற்கு முன்பு, செய்தி நிறுவனம் ஒன்றின் பொறுப்பாசிரியர் பொறுப்பு வகித்து வந்த, இந்து தொழிலதிபரான ராணா பிரதாப் பைராகி (வயது 38) என்பவரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் தலையில் சுட்டு விட்டும், ஆயுதம் கொண்டு தாக்கி விட்டும் தப்பினர்.
இதனால், இந்துக்களாக குறி வைத்து தாக்கப்படுவது அதிகரித்து காணப்படுகிறது. 24 மணிநேரத்தில், 2-வது இந்து தொழிலதிபர் ஒருவர் கொல்லப்பட்டு உள்ளார்.
3 வாரங்களில் சிறுபான்மை சமூகத்தின் 6-வது நபர் மீது இந்த தாக்குதல் நடந்துள்ளது. அவர்களிடையே, இதனால் அச்சமும், பாதுகாப்பின்மையும் அதிகரித்து காணப்படுகிறது. இந்த சம்பவங்களில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. விசாரணை நடந்து வருகிறது.






