வங்காள தேசத்தில் பிப்ரவரி 12-ம் தேதி பொதுத்தேர்தல்


வங்காள தேசத்தில் பிப்ரவரி 12-ம் தேதி பொதுத்தேர்தல்
x
தினத்தந்தி 11 Dec 2025 7:05 PM IST (Updated: 11 Dec 2025 8:15 PM IST)
t-max-icont-min-icon

மாணவர் புரட்சியால் கடந்த ஆக்ஸ்டு 5-ம் தேதி ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்தது.

டாக்கா,

வங்காளதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா ஆட்சிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த மாணவர்கள் போராட்டம் தீவிரம் அடைந்தது. இதனால் ஷேக் ஹசீனா வங்காள தேசத்தில் இருந்து தப்பி இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். தற்போது இடைக்கால அரசின் தலைவராக பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் நியமிக்கப்பட்டார்.

இதற்கிடையே மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்க மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக ஷேக் ஹசீனா மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்தது. இவ்வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு வங்காள தேசத்தின் சர்வதேச குற்றங்கள் தீர்ப்பாயம் சமீபத்தில் மரண தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. இதையடுத்து அவரை நாடு கடத்தவும் இந்தியாவிடம் வங்காள தேசம் கோரிக்கை விடுத்தது. வங்காள தேசத்தின் கோரிக்கையை இந்தியா ஆராய்ந்து வருவதாக வெளியுறவுத் துறை தெரிவித்தது.

இந்தநிலையில், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகிய பிறகு, வங்காளதேசத்தின் 13-வது தேசிய நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 12 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) நசிருதீன் வெளியிட்டார். சுதந்திரமான ஜனநாயக முறையில் வாக்கெடுப்பை நடத்த முடியும் என்பதை உலகிற்கு நிரூபிக்க நாடு தயாராக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

மக்கள் போலியான செய்திகள் மற்றும் வதந்திகளுக்கு எதிராக விழிப்புடன் இருக்குமாறு அவர் வலியுறுத்தினார். பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மற்றும் ஜூலை சாசன (July Charter) வாக்குப்பதிவு ஆகிய இரண்டும் பிப்ரவரி 12-ஆம் தேதி ஒரே நேரத்தில் நடைபெறும் என்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் உறுதிப்படுத்தினார்.

மொத்தம் 300 நாடாளுமன்றத் தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெற உள்ளது. வெளிநாட்டில் வாழும் வங்காள தேச மக்கள் (Non-resident Bangladeshis) நாளை முதல் டிசம்பர் 25 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின்படி, இந்தத் தேர்தலுக்கான முக்கியத் தேதிகள் பின்வருமாறு:

வேட்புமனு தாக்கல் செய்யக் கடைசி நாள்: டிசம்பர் 29, 2025 (திங்கட்கிழமை).

வேட்புமனு பரீசிலனை: டிசம்பர் 30, 2025 (செவ்வாய்க்கிழமை) முதல் ஜனவரி 4, 2026 (ஞாயிற்றுக்கிழமை) வரை நடைபெறும்.

மனுக்களைத் திரும்பப் பெறக் கடைசி நாள்: ஜனவரி 20, 2026 (செவ்வாய்க்கிழமை).

மேலும், தேர்தல் அதிகாரிகளின் முடிவுகளுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய ஜனவரி 11, 2026 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த மேல்முறையீடுகளை ஜனவரி 12 முதல் ஜனவரி 18, 2026 வரை தேர்தல் ஆணையம் முடித்து வைக்கும்.

தேர்தல் செயல்முறைகள் முழுவதும் வெளிப்படைத்தன்மையுடனும் நம்பகத்தன்மையுடனும் நடப்பதை உறுதி செய்ய தேர்தல் ஆணையம் கடமைப்பட்டுள்ளது என்று தலைமைத் தேர்தல் ஆணையர் நசிருதீன் கூறியுள்ளார்.

இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் நியமிக்கப்பட்ட நிலையில் முறைப்படி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் போராட்டத்தின் ஓராண்டுக்கு பிறகு தற்போது வங்காள தேசத்தில் முறைப்படி தேர்தல் நடைபெற உள்ளது.

1 More update

Next Story