வங்காளதேச வன்முறை; மருந்து கடை உரிமையாளர் படுகொலையில் 3 பேர் கைது

கைது செய்யப்பட்டவர்கள் அந்த பகுதியில், கூலிப்படையினராக செயல்பட்டும், போதைப்பொருட்களை பயன்படுத்தியும் வந்துள்ளனர் என ஜகான் கூறினார்.
டாக்கா,
வங்காளதேசத்தில் கடந்த 2024-ம் ஆண்டு ஜூலையில் அப்போது பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சிக்கு எதிராக மாணவர் போராட்டம் வெடித்தது. இதில், ஆளும் அரசு கவிழ்ந்தது. ஷேக் ஹசீனா பதவி விலகியதுடன், அதே ஆண்டு ஆகஸ்டு 5-ந்தேதி சகோதரியுடன் நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்து உள்ளார். அவரை தங்களிடம் ஒப்படைக்க கோரி வங்காளதேசம் வலியுறுத்தி வருகிறது.
இதன் பின்னர், நோபல் பரிசு பெற்ற, பேராசிரியர் முகமது யூனுஸ் தலைமையில் வங்காளதேசத்தில் இடைக்கால அரசு அமைந்தது. நாட்டின் தலைமை ஆலோசகராக யூனுஸ் செயல்பட்டு வருகிறார். கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை மாதம் கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களின் முக்கிய தலைவராக இருந்தவர்களில் ஷெரீப் உஸ்மான் ஹாதி (வயது 32) என்பவரும் ஒருவர்.
இவர் இங்குலாப் மாஞ்சா என்ற அமைப்பை நிறுவி அரசியலில் ஈடுபட்டார். தலைநகர் டாக்காவின் பிஜோய்நகர் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த அவரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பினர். இந்நிலையில், சிங்கப்பூரில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், சில நாட்களில் உயிரிழந்து விட்டார். டிசம்பர் மத்தியில் ஏற்பட்ட அவருடைய மரணம் தொடர்ச்சியாக வங்காளதேசத்தில் வன்முறை வெடித்தது.
இதில், முன்னாள் கல்வி மந்திரி மொகிபுல் ஹசன் சவுத்ரியின் வீடு கொளுத்தப்பட்டது. வங்காளதேசத்தின் நிறுவன தந்தையான ஷேக் முஜிபுர் ரகுமானின் வீடும் சூறையாடப்பட்டது. இந்திய துணைத்தூதரின் வீடு மீதும் கல்வீச்சு சம்பவம் நடந்தது.
இதன் தொடர்ச்சியாக அந்நாட்டில் வசிக்கும் இந்துக்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு முதலில் பலியானவர் மைமன்சிங் நகரை சேர்ந்த திபு சந்திரதாஸ் (வயது 25) என்ற வாலிபர். துணி தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்து வந்த அவரை, மத நிந்தனை செய்து விட்டார் என கூறி அவருடைய ஆடைகளை களைந்து, நிர்வாணப்படுத்தி, ஒரு கும்பல் தொங்க விட்டது. பின்னர் கம்பத்தில் கட்டி வைத்து, அடித்து கொலை செய்தது. இதன்பின்னர் அவருடைய உடலை தீ வைத்து எரித்தது. இந்த கொடூர சம்பவத்திற்கு ஆளும் இடைக்கால அரசு கடும் கண்டனம் தெரிவித்தது.
எனினும், வன்முறை கும்பலின் தாக்குதல் நிற்கவில்லை. இந்நிலையில், அம்ரித் மொண்டல் என்ற 2-வது இந்து நபர் கும்பல் தாக்குதலில் பலியானார். அவர் தனியாக கும்பல் ஒன்றை நடத்தி குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார் என கூறி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த நிலையில், அந்நாட்டின் ஷரியத்பூர் நகரில் மருந்து மற்றும் செல்போன் கடை வைத்து நடத்தி வந்தவர் கோகன் சந்திர தாஸ் (வயது 50). புத்தாண்டு அன்று இரவில் வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு வரும் வழியில் மர்ம கும்பல் வழிமறித்து, ஆயுதங்களால் கடுமையாக தாக்கியது. பின்னர் அவர் மீது பெட்ரோலை ஊற்றி, தீயை வைத்தது.
எனினும், அவர்களிடம் இருந்து தப்பி அருகேயிருந்த குளத்தில் குதித்த அவரை, உள்ளூர்வாசிகள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்பு டாக்கா மருத்துவ கல்லூரியில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பலியானார்.
இதனால், வங்காளதேசத்தில் கும்பல் தாக்குதலில் 3-வது இந்து நபர் ஒருவர் மரணம் அடைந்திருக்கிறார். இதுதொடர்பாக, போலீசார் விசாரணை நடத்தி 3 பேரை கைது செய்தனர். அவர்கள் சொஹாக், ரபி, பலாஷ் என அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.
இதுபற்றி ஷரியத்பூர் போலீஸ் சூப்பிரெண்டு ரவ்னாக் ஜகான் கூறும்போது, கோகன் தாஸ் மரணம் அடைவதற்கு முன்பு குற்றவாளிகளின் பெயர்களை குறிப்பிட்டார் என கூறினார். வன்முறை தாக்குதலின்போது, சிலரை தாஸ் அடையாளம் கண்டு கொண்டதும் அவர் உடல் மற்றும் முகம் மீது பெட்ரோலை ஊற்றி எரித்து, கொல்ல முயன்றுள்ளனர். அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அந்த கும்பல் தப்பி விட்டது என்றார். இவரை மீட்டு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர் என்றார்.
கைது செய்யப்பட்ட நபர்கள் அந்த பகுதியில், கூலிப்படையினராக செயல்பட்டு வந்ததுடன், போதைப்பொருட்களை பயன்படுத்தியும் வந்துள்ளனர் என ஜகான் கூறினார்.






