காசா முனையில் 2 பிணைக் கைதிகளின் உடல்கள் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல்


காசா முனையில் 2 பிணைக் கைதிகளின் உடல்கள் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல்
x

ஹமாஸ் ஆயுதக்குழுவின் பிடியில் இன்னும் 56 பேர் பிணைக் கைதிகளாக உள்ளனர்.

காசா,

காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பிணைக் கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் அமைப்பினர் கடத்திச் சென்றனர்.

இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. அதேவேளை, பிணைக் கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், ராணுவ நடவடிக்கை மூலமும் இஸ்ரேல் மீட்டுள்ளது. பிணைக் கைதிகளில் சிலர் ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கொல்லப்பட்ட நிலையில் அவர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், ஹமாஸ் அமைப்பினரால் கடத்திச் செல்லப்பட்ட 2 பிணைக் கைதிகளின் உடல்கள் காசா முனையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதன்படி ஜூடி வெயின்ஸ்டின் ஹகாய்(வயது 70) மற்றும் அவரது கணவர் காடி ஹகாய்(வயது 72) ஆகிய இருவரின் உடல்கள் கான் யூனிஸ் பகுதியில் கண்டெடுக்கப்பட்டு, இஸ்ரேலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களின் குடும்பத்தினருக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், ஹமாஸ் அமைப்பினர் வசம் உள்ள அனைத்து இஸ்ரேலிய பிணைக் கைதிகளையும் மீட்கும் வரை இஸ்ரேல் ராணுவம் ஓயப்போவதில்லை என்று அவர் கூறியுள்ளார். தற்போதைய நிலவரப்படி, ஹமாஸ் ஆயுதக்குழுவின் பிடியில் இன்னும் 56 பேர் பிணைக் கைதிகளாக உள்ளனர். இதில் சுமார் 20 பேர் உயிருடன் இருக்க வாய்ப்புள்ளது என இஸ்ரேல் தரப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

1 More update

Next Story