இஸ்ரேலும் ஈரானும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிவிட்டன: டிரம்ப் குற்றச்சாட்டு


இஸ்ரேலும் ஈரானும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிவிட்டன: டிரம்ப் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 24 Jun 2025 4:37 PM IST (Updated: 24 Jun 2025 5:22 PM IST)
t-max-icont-min-icon

ஈரான் அதன் அணு ஆயுத கட்டமைப்பை மறுகட்டமைப்பு செய்ய முடியாது என்று டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.

வாஷிங்டன்,

இஸ்ரேல்- ஈரான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்தியதாக கூறியிருந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தற்போது இருநாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இருநாடுகள் மீதும் தனக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகவும் கூறிய டிரம்ப், குறிப்பாக இஸ்ரேல் மீது அதிருப்தியில் இருப்பதாகவும் ஆதங்கப்பட்டுள்ளார்.

போர் நிறுத்தம் என அறிவித்த டிரம்ப்

ஈரான் அணு ஆயுதத்தை தயாரிப்பதில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியது. இது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி அந்நாடு மீது இஸ்ரேல் கடந்த 13-ந்தேதி கடும் தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணு நிலையங்கள், ராணுவ தளங்கள் மீது குண்டுகள் வீசப்பட்டன. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இரு தரப்பும் மாறி, மாறி தாக்குதல்களை தொடுத்தன. இதற்கிடையே இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியது.

ஈரானின் போர்டோவில் உள்ள நிலத்தடி அணு நிலையம் மீது சக்தி வாய்ந்த குண்டுகளை போர் விமானங்கள் மூலம் வீசி அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. மேலும் 2 அணுசக்தி நிலையங்கள் மீது ஏவுகணைகள் வீசப்பட்டன. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரித்தது இந்த நிலையில் இஸ்ரேல்-ஈரான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். எனினும், இந்த அறிவிப்புக்கு பிறகு இருநாடுகளும் தாக்குதல் நடத்தின.

1 More update

Next Story