பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து - 37 பேர் பலி

தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு பெரு.
லிமா,
தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு பெரு. இந்நாட்டின் அரேக்கிப்பா மாகாணம் ஷலா நகரில் இருந்து நேற்று பஸ் புறப்பட்டது. அரேக்கிப்பா நோக்கி புறப்பட்ட அந்த பஸ்சில் 50க்கும் மேற்பட்டோர் பயணித்தனர்.
இந்நிலையில், ஷலா நகரில் மலைப்பாங்கான பகுதியில் உள்ள சாலையில் பஸ் சென்றுகொண்டிருந்தது. அப்போது, சாலையில் எதிரே வந்த கார் மீது பஸ் மோதியது. இந்த சம்பவத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலை அருகே பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பஸ்சில் பயணித்த 37 பேர் உயிரிழந்தனர். மேலும், 13 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






