நடப்பாண்டில் உலக வர்த்தகம் 35 டிரில்லியன் டாலரை எட்டும் ஐ.நா. சபை கணிப்பு

கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளே உலக வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
நியூயார்க்,
ஐக்கிய நாடுகள் சபையின் வர்த்தக மற்றும் மேம்பாட்டு மாநாடு நிறுவனம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
2025-ம் ஆண்டில் உலக வர்த்தகம் புதிய உச்சத்தை எட்டி உள்ளது. தற்போதைய கணிப்புகள் அப்படியே தொடர்ந்தால், 2025-ம் ஆண்டு இறுதிக்குள் உலக வர்த்தகம் 35 டிரில்லியன் டாலரைத் தாண்டும். இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, சுமார் 7 சதவீதம் அதிகம் ஆகும்.
கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளே உலக வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அமெரிக்காவின் இறக்குமதி வர்த்தகம் வலுவாக உள்ளது. ஆனால் சீனாவின் இறக்குமதி பின்னடைவை சந்தித்துள்ளது. இந்த ஆண்டின் 3-வது காலாண்டில் உலகளாவிய வர்த்தக வளர்ச்சி மெதுவாக இருந்தாலும், ஏப்ரல் - ஜூன் வரையிலான 2-ம் காலாண்டுடன் ஒப்பிடும் போது 2.5 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனாலும், 2026-ம் ஆண்டிற்கான உலகளாவிய வர்த்தக வளர்ச்சி நிச்சயமற்ற நிலையில் இருக்கிறது. புவிசார் அரசியல் கொள்கைகள், போர் சூழல், மெதுவான உலகளாவிய பொருளாதார செயல்பாடு, அதிகரித்த கடன் மற்றும் வணிகச் செலவுகள் போன்ற காரணங்கள் வர்த்தக செயல்திறனை பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






