இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்; வெற்றியை நெருங்கி விட்டோம்: ஈரான் தலைவர் அறிவிப்பு


இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்; வெற்றியை நெருங்கி விட்டோம்:  ஈரான் தலைவர் அறிவிப்பு
x
தினத்தந்தி 2 Oct 2024 3:14 AM GMT (Updated: 2 Oct 2024 3:22 AM GMT)

இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்திய நிலையில், எச்சரிக்கையுடன் இருக்கும்படி இஸ்ரேலில் வசிக்கும் தங்களுடைய மக்களை இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் அறிவுறுத்தி உள்ளன.

டெல் அவிவ்,

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த ஆண்டு அக்டோபரில் கொடூர தாக்குதல் நடத்திய பின்னர் மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் தொற்றி கொண்டது. இந்த தாக்குதலில், ஆயிரக்கணக்கான இஸ்ரேல் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதற்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் போரை தொடங்கியது. இதனால், 43 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனிய மக்கள் காசா பகுதியில் உயிரிழந்து உள்ளனர். லட்சக்கணக்கானோர் காயமடைந்து உள்ளனர்.

பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக, ஹிஜ்புல்லா பயங்கரவாத அமைப்பும் போரில் ஈடுபட்டு வருகிறது. லெபனான் நாட்டில் இருந்தபடி, இஸ்ரேலை தாக்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, இஸ்ரேல் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டது. இதில், அடுத்தடுத்து பலர் கொலை செய்யப்பட்டனர். ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டார். அடுத்து, ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி புவாத் ஷுகர் என்பவரை இஸ்ரேல் தாக்கி அழித்தது.

இந்நிலையில், ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவரான ஹசன் நஸ்ரல்லாவை பெய்ரூட் நகரில் வைத்து இஸ்ரேல் ராணுவம் கடந்த மாதம் 27-ந்தேதி தாக்குதல் நடத்தி கொன்றது. இந்த சூழலில், ஹிஸ்புல்லா அமைப்பின் தடுப்பு காவல் பிரிவின் தளபதி மற்றும் அவர்களுடைய செயற்குழுவின் உறுப்பினரான நபில் குவாவக் என்பவரை இஸ்ரேல் ராணுவம் தாக்கி அழித்தது.

இந்த சூழலில், இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலை தொடுத்து உள்ளது. இதனால், லெபனான், ஈரான் நாடுகளை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு இஸ்ரேல் தள்ளப்பட்டது. எனினும், இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்து உள்ளது. இந்நிலையில், இஸ்ரேலில் டெல் அவிவ் நகரருகே திடீரென நேற்று நடந்த துப்பாக்கி சூட்டில் 6 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலை நடத்திய ஈரானியர்கள் என சந்தேகிக்கப்படும் மர்ம நபர்களை இஸ்ரேல் வீரர்கள் சுட்டு கொன்றனர்.

இதன் தொடர்ச்சியாக, இஸ்ரேல் மீது 180-க்கும் மேற்பட்ட பாலிஸ்டிக் ரக ஏவுகணைகள் வீசப்பட்டன. எனினும், அவற்றில் சில ஏவுகணைகளை இஸ்ரேல் நடுவழியிலேயே தாக்கி அழித்தது. இந்த ஏவுகணைகளை ஈரான் வீசிய நிலையில், கடவுளிடம் இருந்து கிடைத்த வெற்றி மற்றும் வெற்றியை நெருங்கி விட்டோம் என்று ஈரான் தலைவர் அலி காமினி இன்று வெளியிட்ட எக்ஸ் சமூக ஊடக பதிவில் பகிர்ந்து உள்ளார்.

அவர் பகிர்ந்து உள்ள புகைப்படம் ஒன்றில் ஏவுகணைகள் தரைக்கு மேலே நெருப்பை உமிழ்ந்து கொண்டு, தாக்குதல் நடத்த புறப்படும் வகையில், தயாராக இருப்பது போன்றும், பூமிக்கு அடியில் குவியல், குவியலாக ஏவுகணைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது போன்ற காட்சிகளும் காணப்படுகின்றன.

இதனால், இஸ்ரேல் மீது ஈரான் தொடர்ந்து தாக்குதலை அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தாக்குதலை முன்னிட்டு பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி இஸ்ரேல் நாட்டில் வசிக்கும் தங்களுடைய மக்களை இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் அறிவுறுத்தி உள்ளன.


Next Story