இஸ்ரேல் ராணுவத்தின் ஆளில்லா விமானத்தை வீழ்த்திய ஈரான்

ஈரானில் உள்ள ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் சேமிப்பு தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
ஜெருசலேம்,
காசா மீது இஸ்ரேல் ஓராண்டுக்கும் மேலாக போர் தொடுத்து வரும் சூழலில், பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஈரான் ராணுவம் கடந்த ஆண்டு அக்டோபரில் இஸ்ரேல் மீது 200-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. அதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்தது.
இதன்பின்னர் இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் தணிந்திருந்த சூழலில், திடீரென 'ஆபரேஷன் ரைசிங் லயன்' என்ற பெயரில் ஈரான் மீது கடந்த 13-ந்தேதி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதனை தொடர்ந்து இஸ்ரேல் மீது ஈரான் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், ஈரானில் இன்று இஸ்ரேல் ராணுவத்தின் ஆளில்லா விமானம் வீழ்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இன்று காலை ஈரானில் நடந்த ராணுவ நடவடிக்கையின்போது தங்கள் ராணுவத்தின் ஆளில்லா விமானம் ஒன்று வீழ்த்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், ஈராக் எல்லைக்கு அருகே மேற்கு ஈரானில் உள்ள ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் சேமிப்பு தளங்களை 15 போர் விமானங்களைக் கொண்டு தாக்கியதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. முன்னதாக, "ஈரானின் அணு மற்றும் ஏவுகணை அச்சுறுத்தல்களை அகற்றும் இலக்கு மிக அருகில் உள்ளது" என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






