இஸ்ரேல்-ஈரான் போர்நிறுத்தம் அமலுக்கு வந்தது

ஈரான் விதிமீறலில் ஈடுபட்டால் இஸ்ரேல் தீவிர பதிலடி தரும் என நெதன்யாகு எச்சரித்தும் உள்ளார்.
பீர்ஷீபா,
ஈரான் மீது ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் கடந்த 13-ந்தேதி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அப்போது, ஈரானின் அணு ஆயுத பயன்பாட்டுக்கு எதிரான தாக்குதல் இது என இஸ்ரேல் தெரிவித்தது.
இதனை தொடர்ந்து ஈரானும் பதில் தாக்குதலில் ஈடுபட்டது. இதனால், 2 நாடுகள் இடையே போர் பதற்றம் அதிகரித்தது. இந்நிலையில், ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் போரில் இறங்கியது. ஈரானின் பர்தவ், நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் ஆகிய 3 அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தியது.
இதனையடுத்து, இதற்கு முன் பார்த்திராத பேரழிவை அமெரிக்கா சந்திக்கும் என ஈரான் தலைவர் காமேனி எச்சரிக்கை வெளியிட்டார். இந்த தாக்குதலுக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் உலக நாடுகள் விமர்சனங்களை வெளியிட்டன. ஒரு சில நாடுகள் நடுநிலையாக இருந்து விட்டன.
இந்நிலையில், இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே முழு அளவில் மற்றும் ஒட்டுமொத்தத்தில் போர்நிறுத்தம் ஏற்பட்டு உள்ளது என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்து உள்ளார்.
இதுபற்றி அவர் ட்ரூத் சோசியலில் வெளியிட்டு உள்ள செய்தியில், இரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு கூட்டாக ஒப்புதல் அளித்துள்ளன. இதனால், அந்த பகுதியில் ஏற்பட்ட பதற்றம் தணிந்து, பகைமைகள் மறைவதற்கான முக்கிய விசயம் ஏற்படும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.
டிரம்பின் கூற்றுப்படி, ஈரான் முதல் கட்ட நடவடிக்கையாக போர்நிறுத்தத்தில் ஈடுபடும். தொடர்ந்து இஸ்ரேலும் 12-வது மணிநேரத்தில் போர்நிறுத்தம் மேற்கொள்ளும். அடுத்த 24 மணிநேரத்தில், முற்றிலும் போரானது நிறுத்தப்படும். 12 நாள் போரானது அதிகாரப்பூர்வ முறையில் உலகம் வணங்கும் வகையிலான ஒரு முடிவுக்கு வரும் என அவர் தெரிவித்து இருக்கிறார். இந்த போர்நிறுத்த காலகட்டத்தில், இரு நாடுகளும் அமைதியாகவும், மதிப்புடனும் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.
இந்நிலையில், ஈரான் நடத்திய தாக்குதலில் இன்று காலை இஸ்ரேலை சேர்ந்த 4 பேர் கொல்லப்பட்டனர். இந்த சூழலில், டிரம்ப் கொண்டு வந்த இருதரப்பு போர்நிறுத்தத்திற்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஒப்புதல் அளித்துள்ளார். ஆனால், ஈரான் விதிமீறலில் ஈடுபட்டால் இஸ்ரேல் தீவிர பதிலடி தரும் என எச்சரித்தும் உள்ளார்.
ஆனால் போர்நிறுத்தம் தொடர்பான டிரம்ப் அறிவிப்பை ஈரான் வெளியுறவு மந்திரி சையத் அப்பாஸ் அரக்சி மறுத்தார். "போர் நிறுத்தம் அல்லது ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்து எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. இருப்பினும், இஸ்ரேல் அரசு ஈரான் மக்களுக்கு எதிரான சட்டவிரோத தாக்குதலை உள்ளூர் நேரப்படி அதிகாலை 4 மணிக்குள் நிறுத்தினால், அதன்பிறகு நாங்களும் பதிலடியைத் தொடரும் நோக்கம் இல்லை. எங்கள் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்த இறுதி முடிவு பின்னர் எடுக்கப்படும்" என்று அரக்சி எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
அதன்பின்னர் போர் நிறுத்தம் தொடர்பாக ஈரான் அரசு உறுதி செய்தது. உள்ளூர் நேரப்படி காலை 7:30 மணிக்கு போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததாக ஈரான் அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது.






