இஸ்ரேல் பெரிய தவறு செய்துவிட்டது - ஈரான் தலைவர் காமேனி

இஸ்ரேல் - ஈரான் மோதலால் மத்திய கிழக்கில் உச்சகட்ட போர்ப்பதற்றம் ஏற்பட்டு உள்ளது.
தெஹ்ரான்,
மத்திய கிழக்கில் ஈரானின் அணு ஆயுத திட்டங்களுக்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன.ஆனால் தங்கள் அணு ஆயுத திட்டம் அனைத்தும் அமைதி நோக்கத்துக்கானவை என ஈரான் கண்டிப்பாக கூறி வருகிறது. எனினும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் இஸ்ரேல் தலைவர்கள் இதை நம்ப தயாரில்லை. ஈரானால் உடனடியாக அணு ஆயுதங்களை தயாரிக்க முடியும் என கருதுகின்றனர்.
எனவே ஈரானை அணு ஆயுதம் எதுவும் தயாரிக்காமல் பேச்சுவார்த்தை மூலம் தடுத்து நிறுத்த அமெரிக்கா திட்டமிட்டது. இதற்காக பேச்சுவார்த்தைகளும் நடந்தன. அதேநேரம் ஈரானின் அணு ஆயுதங்கள் தங்களின் இருத்தலுக்கே மிகப்பெரும் அச்சுறுத்தலாக மாறும் எனக்கூறி இஸ்ரேல் கடந்த 13-ந் தேதி திடீரென ஈரான் மீது தாக்குதல் தொடுத்தது.
இஸ்ரேலின் இந்த அதிரடிக்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் இஸ்ரேலை திக்குமுக்காடச்செய்து வருகிறது.கடந்த 10 நாட்களாக நடந்து வரும் இந்த தாக்குதலால் மத்திய கிழக்கில் பெரும் போர் பதற்றம் நீடித்து வருகிறது.
இந்த தாக்குதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருந்து வரும் அமெரிக்கா, ஈரானை தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு அழைத்து வந்தது. ஆனால் இஸ்ரேலின் தாக்குதலுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வரும் நிலையில், அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்துவது பலனளிக்காது எனக்கூறி ஈரான் ஒதுங்கிவிட்டது. எனினும் ஈரானுக்கு 2 வாரங்கள் கெடு வழங்கி இருப்பதாக அறிவித்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ஈரானுடன் நேரடி போரில் ஈடுபடுவதா? இல்லையா? என 2 வாரங்களில் முடிவு எடுப்பேன் என அறிவித்து இருந்தார்.
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு ஈரான் ஆர்வம் காட்டாததால், அந்த நாடு மீது அமெரிக்கா எந்த நேரத்திலும் நேரடி தாக்குதல் நடத்தும் என்ற எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் ஏற்பட்டிருந்தது. அதன்படியே நேற்று அதிகாலையில் ஈரான் மீது அமெரிக்கா நேரடியாக தாக்குதல் தொடுத்தது. அந்த நாட்டின் போர்டோ, நட்டான்ஸ், இஸ்பகான் ஆகிய 3 இடங்களில் உள்ள அணுசக்தி நிலையங்களை தாக்கியது.
அமெரிக்காவின் இந்த தாக்குதலால் போர்டோ அணுசக்தி தளத்தில் பெரும் சேதம் ஏற்பட்டிருப்பது செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் தெரியவந்துள்ளது. அந்த இடத்தில் இருந்து சாம்பல் நிற புகை வெளியேறுவதாகவும், இதனால் பழுப்பு நிறத்திலான அந்த மலையே சாம்பல் நிறமாக காட்சியளிப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.எனினும் இந்த தாக்குதல்களால் கதிரியக்க ஆபத்து மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு எதுவும் இதுவரை இல்லை எனவும், எனினும் அந்த தளங்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் சர்வதேச அணுசக்தி முகமை கூறியுள்ளது.
தங்கள் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்க தாக்குதல் நடத்தியதை ஈரானும் உறுதி செய்துள்ளது. எதிரிகளின் இந்த அச்சுறுத்தலை பார்த்து அணு திட்டங்களை ஒருபோதும் நிறுத்தமாட்டோம் என அந்த நாட்டு அணுசக்தி அமைப்பு அறிக்கை ஒன்றில் தெரிவித்து இருந்தது.
அமெரிக்காவின் இந்த தாக்குதல் தொடருமா? என்பது குறித்து டிரம்ப் எதையும் தெரிவிக்கவில்லை. அதேநேரம் இந்த தாக்குதல் தொடர்பாக அமெரிக்காவுக்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. ஈரானுக்கு எதிராக ஆபத்தான போரை அமெரிக்கா தொடங்கி இருப்பதாக அந்த நாடு குற்றம் சாட்டியுள்ளது.
எனினும் அமெரிக்கா தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் மீது ஈரான் பயங்கர தாக்குதலை நடத்தியது. 40-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை இஸ்ரேலை நோக்கி செலுத்தியதாக ஈரானின் புரட்சிகர படை தெரிவித்தது. இதில் குழந்தைகள் உள்பட 80-க்கும் மேற்பட்டோர் லேசான காயம் அடைந்ததாக இஸ்ரேல் கூறியுள்ளது. டெல் அவிவ் நகரில் பலமாடி கட்டிடம் ஒன்றும், ஏராளமான வீடுகளும் சேதமடைந்துள்ளன.மறுபுறம் ஈரான் மீது இஸ்ரேலும் தாக்குதல் நடத்தியது. இதில் ஈரானின் 2 எப்-5 ரக விமானங்களை அழித்ததாக இஸ்ரேல் கூறியுள்ளது. மேலும் இஸ்பகான் விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகள் உள்பட பல இடங்களிலும் தாக்குதல் நடத்தியது.இரு நாடுகளுக்கு இடையே 10 நாட்களாக நடந்து வரும் தாக்குதலால் உயிரிழப்பு அதிகரித்து உள்ளது.
அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், சமூக வலைதளத்தில் ஈரான் தலைவர் அயதுல்லா அலி காமேனி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: இஸ்ரேல் மிகப்பெரிய தவறு செய்துவிட்டது. தவறுக்கான தண்டனை தொடரும். எதிரி கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டியவர். அதற்கு நேரம் வந்துவிட்டது என பதிவிட்டுள்ளார்.
அமெரிக்கா 3 அணுசக்தி நிலையங்களை தாக்கிய பின் முதல் முறையாக கருத்து கூறியுள்ள ஈரானின் உச்சபட்ச தலைவர். எந்த இடத்திலும் அமெரிக்காவைப் பற்றியோ, அதன் தாக்குதலை பற்றியோ தெரிவிக்கவில்லை.






