இஸ்ரேல்-ஈரான் போர் பதற்றம்; நெதன்யாகு மகனின் திருமணம் ஒத்திவைப்பு

அவ்னெர் நெதன்யாகு-அமித் யார்தேனி ஜோடியின் திருமணம் இன்று நடைபெறுவதாக இருந்தது.
ஜெருசலேம்,
ஈரானின் தெஹ்ரானில் ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தலைமையகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் ராணுவத்தின் இந்த தாக்குதல் நடவடிக்கைக்கு 'ஆபரேஷன் ரைசிங் லயன்' என பெயரிடப்பட்டுள்ளது.
ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் அரசாங்கம் தெரிவித்துள்ளது. அதேநேரம் இந்த தாக்குதல் மூலம் இஸ்ரேல் போர் பிரகடனம் செய்திருப்பதாக ஈரான் தெரிவித்து உள்ளது.
இதையடுத்து இஸ்ரேலுக்கு எதிரான பதிலடி நடவடிக்கையாக, இஸ்ரேலின் டெல் அவிவ் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களின் மீது ஈரான் எதிர்தாக்குதல் நடத்தி வருகிறது. இதனையொட்டி இஸ்ரேலின் வான் எல்லை மூடப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் பெரும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், இஸ்ரேல்-ஈரான் இடையேயான போர் பதற்றம் காரணமாக இன்று நடைபெற இருந்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் மகன் அவ்னர் நெதன்யாகுவின் திருமணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக அவ்னெர் நெதன்யாகு-அமித் யார்தேனி ஜோடியின் திருமணம் இன்று நடைபெறுவதாக இருந்தது.
இந்த சூழலில் இஸ்ரேல்-ஈரான் நாடுகள் 3-வது நாளாக தீவிர தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் அங்கு போர் ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது. மேலும் காசாவில் இஸ்ரேலியர்கள் பணயக்கைதிகளாக உள்ள நிலையில், நாட்டின் பிரதமர் கொண்டாட்டத்தில் ஈடுபடுவதா? என விமர்சனங்கள் எழுந்தன. இதன் காரணமாக நெதன்யாகு மகனின் திருமணத்தை தள்ளி வைக்க முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.






