இஸ்ரேல் நடத்திய தாக்குதல் - ஈரானில் 950 பேர் உயிரிழந்ததாக தகவல்

Image Courtesy : PTI
ஈரான் அரசு வெளியிட்ட தகவலின்படி சுமார் 400 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
தெஹ்ரான்,
காசா மீது இஸ்ரேல் ஓராண்டுக்கும் மேலாக போர் தொடுத்து வரும் சூழலில், பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஈரான் ராணுவம் கடந்த ஆண்டு அக்டோபரில் இஸ்ரேல் மீது 200-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. அதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்தது.
இதன்பின்னர் இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் தணிந்திருந்த சூழலில், திடீரென 'ஆபரேஷன் ரைசிங் லயன்' என்ற பெயரில் ஈரான் மீது கடந்த 13-ந்தேதி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதனை தொடர்ந்து இஸ்ரேல் மீது ஈரான் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் போரில் இறங்கியுள்ளது. ஈரானின் பர்தவ், நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் ஆகிய 3 அணு உலைகள் மீது அமெரிக்க ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதனிடையே, அமெரிக்காவுக்கு பேரழிவு காத்திருக்கிறது என ஈரான் தலைவர் அயோத்துல்லா அலி காமேனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில், இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானில் இதுவரை சுமார் 950 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 3,450 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள் அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களில் இதுவரை 380 பொதுமக்கள் மற்றும் 253 பாதுகாப்பு படை வீரர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.
முன்னதாக ஈரான் சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதல்களில் ஈரானில் சுமார் 400 பேர் உயிரிழந்ததாகவும், 3,056 பேர் படுகாயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.






