உக்ரைன், ரஷியா போரால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் - மெலனியா டிரம்ப் வெளியிட்ட தகவல்


உக்ரைன், ரஷியா போரால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் - மெலனியா டிரம்ப் வெளியிட்ட தகவல்
x
தினத்தந்தி 11 Oct 2025 1:43 AM IST (Updated: 11 Oct 2025 1:58 AM IST)
t-max-icont-min-icon

கடந்த 24 மணி நேரத்தில் 8 குழந்தைகள் தங்கள் குடும்பங்களுடன் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளனர் என்று மெலனியா டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்,

உக்ரைன், ரஷியா இடையிலான போர் சுமார் 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் முயற்சித்தன. ஆனால் போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. இந்த போரால் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.

அதில் குறிப்பாக உக்ரைன், ரஷியா போரால் ஏராளமான குழந்தைகள் தங்கள் பெற்றோர்களை விட்டுப் பிரிந்து ரஷியாவில் பாதிகாப்பு முகாம்களில் வசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பின் மனைவியும், அமெரிக்காவின் முதல் பெண்மணியுமான மெலனியா டிரம்ப், கடந்த ஆகஸ்ட் மாதம் ரஷிய அதிபர் புதினுக்கு கடிதம் எழுதினார்.

அந்த கடிதத்தில், போரால் பாதிக்கப்பட்டு தங்கள் குடும்பங்களை விட்டுப் பிரிந்த குழந்தைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மெலனியா வலியுறுத்தியிருந்தார். இந்த நிலையில், வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் மெலனியா டிரம்ப் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

“ஒரு குழந்தையின் ஆன்மாவுக்கு எல்லைகள் இல்லை, கொடிகள் இல்லை. பாதுகாப்பு மற்றும் சுதந்திரம் நிறைந்த எதிர்காலத்தை நமது குழந்தைகளுக்கு நாம் உருவாக்கித் தர வேண்டும். கடந்த ஆகஸ்ட் மாதம் புதினுக்கு நான் கடிதம் எழுதிய பிறகு நிறைய முன்னேற்றங்கள் நடந்துள்ளன.

எனது கடிதத்திற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த அவர், ரஷியாவில் வசிக்கும் உக்ரைனிய குழந்தைகள் தொடர்பான விவரங்களை கோடிட்டுக் காட்டினார். கடந்த 3 மாதங்களாக பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நலன் குறித்து அதிபர் புதினும், நானும் வெளிப்படையான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறோம். இது தொடர்பாக இருதரப்புக்கும் இடையே பல்வேறு ஆலோசனைக் கூட்டங்கள் நடந்துள்ளன.

போரால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மக்களின் நலனுக்காகவும் ஒருவருக்கொருவர் ஒத்துழைக்க நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம். ரஷியாவில் உள்ள உக்ரைனிய குழந்தைகள் தங்கள் குடும்பங்களுடன் பாதுகாப்பாக மீண்டும் ஒன்றிணைவதை உறுதி செய்வதற்காக, புதினின் குழுவுடன் எனது பிரதிநிதி நேரடியாகப் பணியாற்றி வருகிறார். கடந்த 24 மணி நேரத்தில் 8 குழந்தைகள் தங்கள் குடும்பங்களுடன் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளனர்.

இந்த 8 குழந்தைகளுக்கும் ரஷியாவில் வழங்கப்பட்ட மருத்துவ, சமூக மற்றும் சுகாதார உதவிகள் குறித்த விரிவான அறிக்கைகளை ரஷிய அரசாங்கம் என்னிடம் வழங்கியுள்ளது. அந்த தகவல்கள் அனைத்தும் உண்மையானவை என்பதை அமெரிக்க அரசு உறுதி செய்துள்ளது. அமெரிக்காவின் முதல் பெண்மணியாக எனக்கு இது மிகவும் முக்கியமான முன்னெடுப்பாகும்.

போரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உடல்நலம் தொடர்பான தகவல்கள் வெளிப்படையாக கிடைப்பதையும், பிரிந்து சென்ற குழந்தைகள் மீண்டும் தங்கள் குடும்பத்தினருடன் ஒன்றிணையவதையும் உறுதி செய்வதே எனது திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும். இதற்கு அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு வழங்க ரஷிய அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

1 More update

Next Story