அமெரிக்காவில் விபத்தில் சிக்கிய சிறிய ரக விமானம்; ஒருவர் பலி

விமானம் விபத்தில் சிக்கிய வயல்வெளியின் தரை பகுதியில் பனி மற்றும் ஈரப்பதம் ஆகியவற்றால், மீட்பு முயற்சிகள் பாதிக்கப்பட்டன.
நியூயார்க்,
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஒயிட் பிளைன்ஸ் பகுதியில் வெஸ்ட்செஸ்டர் கவுன்டி விமான நிலையத்தில் இருந்து மிட்சுபிஷி எம்.யு.-2பி ரக தனியார் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. அது வடக்கே ஹட்சன் அருகே கொலம்பியா கவுன்டி விமான நிலையம் நோக்கி சென்றபோது விபத்தில் சிக்கியது. அந்த விமானத்தில் 2 பேர் இருந்துள்ளனர்.
இதுபற்றி அந்நாட்டின் மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், விமானம் கோபேக் என்ற நகரருகே வயல்வெளியில் விழுந்துள்ளது. எனினும், இதனால் வேறு எந்த கட்டமைப்புக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இந்த விபத்தில் அதில் பயணித்த ஒருவர் பலியானார் என தெரிவிக்கப்பட்டது.
விபத்தில் சிக்கிய விமானத்தில் பயணித்த அவர்கள் இரண்டு பேரும் யாரென அடையாளம் காணப்படவில்லை. தரை பகுதியில் பனி மற்றும் ஈரப்பதம் காணப்பட்டது. இதனால், மீட்பு முயற்சிகள் பாதிக்கப்பட்டு உள்ளன.
வயல்வெளி சேறும் சகதியும் நிறைந்து காணப்பட்டது. இதனால், அந்த பகுதியில் மீட்பு பணியை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. விமானம் விபத்திற்குள்ளானதற்கான காரணம் உடனடியாக தெரிய வரவில்லை. இதுபற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது.






