எந்த போர் விமானங்களும் சுட்டு வீழ்த்தப்படவில்லை: பாகிஸ்தான் சொல்கிறது

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை பாகிஸ்தான் நாட்டுக்கு சொந்தமான 6 போர் விமானங்களை இந்தியா சுட்டு வீழ்த்தியது.
இஸ்லமாபாத்,
காஷ்மீர் பஹல்காமில் கடந்த ஏப்ரல் மாதம் 22-ந் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப் பட்டனர் இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பழிவாங்கும் நோக்கத்தில் இந்தியா கடந்த மே மாதம் 7-ந் தேதி ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது.
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. மேலும் பயங்கரவாதிகளும் இந்தியாவின் தாக்குதலில் கொல்லப்பட்டனர். அதைத்தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை ஏற்பட்டது. இந்த சண்டை 4 நாட்கள் நீடித்தது. அதன்பிறகு இருநாட்டு இடையேயும் சண்டை நிறுத்தம் ஏற்பட்டது.
இந்தியா, பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது பற்றி அவ்வப்போது புதுப்புது தகவல்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் இந்த சண்டையின்போது பாகிஸ்தானின் 6 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இந்திய விமானப்படை தலைமை தளபதி அமர்பிரித் சிங் கூறியுள்ளார். இந்த நிலையில், பாகிஸ்தான் பாதுகாப்பு மந்திரி கவாஜா ஆசிப் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இந்திய தரப்பிலிருந்து பாகிஸ்தானின் ஒரு விமானம் கூட சுட்டு வீழ்த்தப்படவோ அல்லது தாக்கப்படவோ இல்லை.. இந்திய விமானப்படை தரப்பிலிருந்து கால தாமதமாக தெரிவிக்கப்பட்டு இருக்கும் தகவல் நம்பும் படியாக இல்லை. உண்மை தெரிய வேண்டுமாயின், இரு தரப்பிலிருந்தும் விமானப்படை தளவாடங்களை சுதந்திரமாக ஆய்வு செய்திட அனுமதிப்போம்” என்றார்.






