உக்ரைன் அணு உலை மீது ரஷியா டிரோன் தாக்குதல்


உக்ரைன் அணு உலை மீது ரஷியா டிரோன் தாக்குதல்
x
தினத்தந்தி 14 Feb 2025 3:20 PM IST (Updated: 14 Feb 2025 4:04 PM IST)
t-max-icont-min-icon

உக்ரைன் அணு உலை மீது ரஷியா டிரோன் தாக்குதல் நடத்தியது.

கீவ்,

உக்ரைன், ரஷியா இடையேயான போர் இன்று 1 ஆயிரத்து 86வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சித்து வருகிறார். போர் தொடர்பாக ரஷிய அதிபருடன் டொனால்டு டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அதேவேளை, தங்கள் கருத்துக்களை கேட்காமல் அமைதி பேச்சுவார்த்தை சாத்தியமில்லை என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இதனிடையே, உக்ரைனின் கீவ் மாகாணத்தில் செர்னோபெல் அணு உலை உள்ளது. இந்த அணு உலையில் கடந்த 1986ம் ஆண்டு விபத்து ஏற்பட்டது. அணு உலையில் இருந்து வெளியேறிய அணு கசிவால் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், அணு கசிவு பாதிப்பால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். இந்த விபத்தை தொடர்ந்து அணு உலை மூடப்பட்டது. ஆனாலும், அணு உலையில் இருந்து கதிரியக்கம் தொடர்ந்து வெளியேறிய நிலையில் அதை தடுக்க இரும்பு சட்டம் (steel arch) அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், செர்னோபெல் அணு உலை மீது ரஷியா இன்று டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. அதிகாலை 2 மணியளவில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலால் அணு உலையின் மேற்கூரை தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து, விரைந்து வந்த மீட்புக்குழுவினர் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இந்த தாக்குதலில் அணு உலையில் இருந்து கதிரியக்கம் வெளியேறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story