ஊழல் புகாரில் ஷேக் ஹசீனாவுக்கு 21 ஆண்டுகள் சிறை

சமீபத்தில் அந்நாட்டு சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்தது குறிப்பிடத்தக்கது.
டாக்கா,
வங்க தேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, அந்த நாட்டில் நடந்த மாணவர் போராட்டத்தால் பதவியிழந்து, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். அப்போது மாணவர் போராட்டத்தை ஒடுக்க மிருகத்தனமாக செயல்பட்டதாகவும், சொந்த நாட்டு மக்களை கொன்று குவித்த, மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்காக அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதாக சிறப்பு தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது. இதையடுத்து அவரை நாடு கடத்தவும் இந்தியாவிடம் வங்கதேசம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில் வங்க தேசத்தின் கோரிக்கையை இந்தியா ஆராய்ந்து வருவதாக வெளியுறவுத் துறை தெரிவித்து உள்ளது. ‘நடந்து வரும் நீதித் துறை மற்றும் உள்சட்ட செயல்முறையின் ஒரு பகுதியாக வங்க தேசத்தின் கோரிக்கை ஆராயப்பட்டு வருவதாக’ வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.
இந்தநிலையில், வங்காள தேசத்தில் புர்பச்சல் புதிய நகர் திட்டத்தில், அவருக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும் விதிமுறைகளை மீறி நிலம் ஒதுக்கப்பட்டதாகவும், அதில் ஊழல் நடந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த டாக்கா சிறப்பு நீதிமன்ற நீதிபதி முகமது அப்துல்லா அல் மமும், 3 வழக்குகளிலும் ஷேக் ஹசீனா குற்றவாளி என அறிவித்தார். மேலும் அவருக்கு ஒவ்வொரு வழக்கிலும் தலா 7 ஆண்டுகள் என மொத்தம் 21 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். அவரின் மகன் சஜீப் வாகீத்துக்கும், மகள் சயிமா வாஜீத்துக்கும் தலா 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.






