நிலநடுக்கத்தின்போது உயிரை காப்பாற்றியவருக்கு தன்னையே கொடுத்த இளம்பெண்

இளம் ஜோடியின் காதல், திருமணம், வாழ்க்கையை நெட்டிசன்கள் புகழ்ந்து வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
பீஜிங்,
சீனாவின் தெற்கே ஹுனான் மாகாணத்தில் சாங்ஷா நகரில் 30-க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு கூட்டாக திருமணம் நடந்தது. அதில் ஒரு ஜோடியின் திருமண பின்னணி சுவாரஸ்யம் நிறைந்தது. அவர்களில், கணவர் லியாங் ஜிபினை விட மணமகளான லியு ஜிமிக்கு 12 வயது குறைவு.
இதில் என்ன விசேஷம் என்கிறீர்களா..? இவர்களுடைய காதல் 15 ஆண்டுகளுக்கு முன்பு துளிர்க்க தொடங்கியுள்ளது. வென்சுவான் பகுதியில் 2008-ம் ஆண்டு காலை பொழுதில் திடீரென ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தின்போது, பள்ளி மாணவ மாணவிகள் பலர் சிக்கி கொண்டனர். பலர் மண்ணில் புதையுண்டனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலர் மரணித்தனர்.

200-க்கும் மேற்பட்ட பள்ளி சிறுவர் சிறுமிகள் உயிரிழந்தனர். அவர்களின் புகைப்படங்களை கையில் வைத்து கொண்டு நிலநடுக்க பகுதியில் அவர்களை பெற்றோர் தேடிய சோக காட்சிகள் புகைப்படங்களாக வெளிவந்து துயரை ஏற்படுத்தியது.
அந்த பாதிப்பில் சிக்கி கொண்டவர்களில் 10 வயது சிறுமியான லியுவும் ஒருவர். சம்பவம் பற்றி அறிந்ததும் ராணுவ வீரராக பணியாற்றிய லியாங் மற்றும் அவருடைய குழுவினர் உடனடியாக சம்பவ பகுதிக்கு விரைந்தனர். 4 மணிநேரம் வரை கட்டிட இடிபாடுகளை நீக்கி பலரை மீட்டனர். அதில் சிக்கியிருந்த லியுவை பாதுகாப்பாக மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அப்போது, லியாங்கை லேசான மயக்கத்தில் இருந்த லியு பார்த்துள்ளார். இதன்பின்னர், லியு குணமடைந்ததும் அவருடைய குடும்பத்தினர் ஹுனான் மாகாணத்திற்கு புலம் பெயர்ந்தனர்.
பல ஆண்டுகள் ஓடி விட்டன. ஆனால், லியாங்கின் உருவம் மட்டும் லேசாக லியுவின் நினைவில் இருந்துள்ளது. இந்நிலையில், 2020-ம் ஆண்டு அந்த சம்பவம் நடந்தது. சாங்ஷா பகுதியில் உணவு விடுதி ஒன்றிற்கு பெற்றோருடன் லியு சென்றிருக்கிறார். அப்போது அவருக்கு வயது 22. அவருக்கு பக்கத்து மேஜையில் அமர்ந்திருந்த நபரை லியுவின் தாயார் பார்த்தபடி, இவர் உன்னை காப்பாற்றியவர் போல் இருக்கிறாரே.. என கூறியுள்ளார்.
உடனே அந்த பக்கம் திரும்பி பார்த்த லியு, இருக்கையில் இருந்து எழுந்து நேராக அவரிடம் சென்றார். லியாங் அண்ணா? நீங்கள்தான் என்னை காப்பாற்றியவரா? என கேட்டுள்ளார். அப்போது ஆச்சரியத்துடனும் சற்று நெருடலுடனும் இருந்தேன் என லியு கூறுகிறார். அவள் நன்றாக வளர்ந்து விட்டாள். என்னால் அப்போது லியுவை சரியாக அடையாளம் காண முடியவில்லை என லியாங் கூறினார்.
இதன்பின்பு வீட்டுக்கு வந்த லியு, மொபைல் போனில் லியாங்கின் பெயர், எண்ணை இணைத்திருக்கிறார். அவரிடம் பேச தொடங்கினார். இந்த சாட்டிங் நாளடைவில் காதலாக உருமாறியது. லியாங்கின் நேர்மை, மனவுறுதி ஆகியவை அவரை நோக்கி லியுவை ஈர்க்க செய்துள்ளது. இறுதியாக துணிச்சலை வரவழைத்து கொண்டு முதலில் லியாங்கிடம் லியுவே காதலை வெளிப்படுத்தி உள்ளார்.
நான் நன்றிகடனுக்காக அவரை காதலிக்கவில்லை. நாங்கள் ஒன்றாக நேரம் செலவிட்டோம். என்னுடைய வாழ்க்கையில், நம்ப கூடிய ஒரு சிலரில் இவரும் ஒருவராக இருப்பார் என நான் நினைத்தேன் என கூறுகிறார். லியாங்கோ, என் வாழ்வின் நம்பிக்கைக்கான ஒளி லியு என கூறினார். வாழ்க்கை முழுவதும் நம்பிக்கை நிறைந்துள்ளது என கூறினார்.
விதி உண்மையில் ஆச்சரியம் தருகிறது. 12 ஆண்டுகளுக்கு முன் நான் அவளை காப்பாற்றினேன். 12 ஆண்டுகளுக்கு பின்பு, என் வாழ்வின் ஒளியாக அவள் மாறி விட்டாள் என கூறுகிறார். இவர்களுடைய காதல், திருமணம், வாழ்க்கையை நெட்டிசன்கள் புகழ்ந்து வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.






