அமைதிக்கான நோபல் பரிசுக்கு டிரம்பின் பெயர் பரிந்துரை... கொளுத்தி போட்ட பாகிஸ்தான்


அமைதிக்கான நோபல் பரிசுக்கு டிரம்பின் பெயர் பரிந்துரை... கொளுத்தி போட்ட பாகிஸ்தான்
x

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீருக்கு, டிரம்ப் விருந்தளித்த நிலையில் இந்த அறிவிப்பு வெளிவந்து உள்ளது.

கராச்சி,

காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பாகிஸ்தானில் இருந்து செயல்படும், இந்தியாவால் தடை செய்யப்பட்ட பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் பலியானார்கள். இதற்கு பதிலடியாக, இரு வாரங்களுக்கு பின்னர் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது இந்திய ராணுவம், பயங்கரவாத இலக்குகளை குறிவைத்து தாக்குதலை நடத்தியது.

9 பயங்கரவாத உட்கட்டமைப்புகளை இலக்காக கொண்டு இந்திய ஆயுத படைகள் சார்பில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த சம்பவத்திற்கு பின்பு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்ற சூழல் உருவானது. 4 நாட்களுக்கு பின்னர் இரு நாடுகளும் போர் நிறுத்த முடிவுக்கு வந்தன.

பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்துவது இந்தியாவின் நோக்கமல்ல என மத்திய அரசு கூறியது. பயங்கரவாதிகளுக்கு எதிராகவே நடவடிக்கை எடுக்கப்பட்டது என தெரிவித்தது. ஆனால், அமெரிக்க அரசின் முயற்சியாலேயே போர் நிறுத்தம் வந்தது என்ற வகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அப்போது பேசியது சர்ச்சையானது.

இந்நிலையில், பாகிஸ்தான் அரசு எக்ஸ் தளத்தில் வெளியிட்டு உள்ள பதிவில், சமீபத்திய இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றத்தின்போது, உறுதியான முறையில் தூதரக அளவில் தலையிட்டும் மற்றும் முக்கிய தலைமையேற்றதற்காகவும், அதனை அங்கீகரிக்கும் வகையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் பெயரை, 2026-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்க முடிவு செய்துள்ளோம் என பதிவிட்டு உள்ளது.

இரு அணு ஆயுத நாடுகளுக்கு இடையே விரிவான மோதல் ஏற்பட்டு லட்சக்கணக்கான மக்களுக்கு பெரும் பாதிப்புகள் ஏற்படாமல் தவிர்க்கும் வகையில், போர்நிறுத்தம் ஏற்பட வழிவகுத்தவர். பேச்சுவார்த்தை வழியே போருக்கு தீர்வு ஏற்படுத்துவதில் ஈடுபாட்டுடன் செயல்பட்டு, அமைதியை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றியவர் டிரம்ப் என்றும் பாகிஸ்தான் தெரிவித்து உள்ளது.

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீருக்கு டிரம்ப் விருந்தளித்த நிலையில் இந்த அறிவிப்பு வெளிவந்து உள்ளது. இதுதவிர, காஷ்மீர் விவகாரத்தில் உதவ முன் வந்ததற்காக அவருக்கு பாகிஸ்தான் அரசு நன்றி தெரிவித்து கொள்கிறது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர்நிறுத்தம் ஏற்பட்டதற்கு நேரடி ராணுவ பேச்சுவார்த்தைகளே காரணம் என்றும், பாகிஸ்தானுக்கு எதிரான போர்நிறுத்த முடிவை எடுத்ததற்கு அமெரிக்காவின் தலையீடோ அல்லது 3-ம் நாட்டின் தலையீடோ கிடையாது என்றும் தொடர்ந்து இந்தியா உறுதியாக கூறி வருகிறது. இதற்கேற்ப கடந்த மே 10-ந்தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் ராணுவ உயரதிகாரிகள் சந்தித்து பேசினர்.

இந்த நிலையில், இந்தியா-பாகிஸ்தான் போரை தடுத்து நிறுத்தியதற்காக எனக்கு நோபல் பரிசு கிடைக்காது என டிரம்ப் மீண்டும் பேசி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.

1 More update

Next Story