ரஷியாவின் அணுசக்தி ஏவுகணை பரிசோதனை பற்றிய கேள்விக்கு மிரட்டலாக பதிலளித்த டிரம்ப்

நாங்கள் எல்லா நேரமும் ஏவுகணை பரிசோதனை செய்து கொண்டுதான் இருக்கிறோம் என டிரம்ப் கூறினார்.
டோக்கியோ,
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஜப்பானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவரிடம் ரஷியா சமீபத்தில் மேற்கொண்ட பியூர்வெஸ்ட்னிக் அணுசக்தி ஏவுகணை பரிசோதனை பற்றி செய்தியாளர்கள் தரப்பில் இருந்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த டிரம்ப், உலகிலேயே மிக பெரிய அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் எங்களிடம் உள்ளது என அவர்களுக்கு தெரியும்.
அதனால், நான் கூறுவது என்னவென்றால், அந்த கப்பல் 8 ஆயிரம் மைல்கள் தொலைவுக்கு பயணம் செய்ய வேண்டியிருக்காது என நினைக்கிறேன். அவர்கள் எங்களுடன் விளையாடவில்லை. நாங்களும் கூட அவர்களுடன் விளையாடவில்லை என்றார். ஏவுகணை பரிசோதனை பற்றி குறிப்பிட்ட அவர், நாங்கள் எல்லா நேரமும் ஏவுகணை பரிசோதனை செய்து கொண்டுதான் இருக்கிறோம் என்றார்.
தொடர்ந்து அவர் பேசும்போது, உக்ரைனுக்கு எதிரான போரை புதின் முடிவுக்கு கொண்டு வர வேண்டும். அவருக்கு இதனை நான் கூறுவது என்பது சரியாக இருக்காது என நினைக்கிறேன். ஒரு வாரத்தில் முடிய வேண்டிய போர் 4-வது ஆண்டிலும் உள்ளது. அதனால், ஏவுகணை பரிசோதனை செய்வதற்கு பதிலாக, போரை நிறுத்துவதற்கான பணியில் அவர் ஈடுபட வேண்டும் என கூறினார்.
ரஷியாவின் அணுசக்தி ஏவுகணையை பற்றி அந்நாட்டு அதிகாரிகள் கூறும்போது, தொடர்ந்து 15 மணிநேரம் வரை பறக்க கூடிய திறன் வாய்ந்தது. 14 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு செல்ல கூடியது என தெரிவித்தனர். ரஷியா மற்றும் உக்ரைன் இடையே 2022-ம் ஆண்டு பிப்ரவரியில் போர் மூண்டது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் ஆயுதங்கள் மற்றும் நிதி உதவியை வழங்கி வருகின்றன.
ரஷியாவுக்கு, நட்பு நாடான வடகொரியா, ராணுவ தளவாடங்கள் மற்றும் வீரர்களை அனுப்பி மறைமுக உதவி செய்கிறது என கூறப்படுகிறது. போரால் பெண்கள், குழந்தைகள் மற்றும் வீரர்கள் என இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கில் பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வரும் மத்தியஸ்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா ஈடுபட்டது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதன்படி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் டிரம்ப் பேசினார். இதில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டு உள்ளன என வெள்ளை மாளிகையில் பேசும்போது அவர் குறிப்பிட்டார். ஆனால், ரஷியாவோ போரை நிறுத்தும் முடிவுக்கு வரவில்லை. அதற்கான பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால், போர் முடிவுக்கு வராமல் தொடர்ந்து வருகிறது.






