நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயார்; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு

மேற்கத்திய நாடுகளிடமிருந்து உறுதியான பாதுகாப்பு உத்தரவாதங்களை பெற்றால், நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்த அமெரிக்கா தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அளித்துள்ள பேட்டியில், மேற்கத்திய நாடுகளிடமிருந்து உறுதியான பாதுகாப்பு உத்தரவாதங்களை பெற்றால், நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், இருதரப்பு அமைதியையும், ரஷ்யா மீண்டும் தாக்குதல் நடத்தாது என்பதற்கான உறுதியான பாதுகாப்பு உத்தரவாதங்களையும் உக்ரைன் விரும்புகிறது என்றார். உக்ரைன் நகரங்கள் மற்றும் முக்கியமான உள்கட்டமைப்புகள் மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் மூலம் ரஷ்யா வேண்டுமென்றே மோதலை நீடிக்கிறது என்றும் கூறினார்.
இது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவில் ஏற்பட்ட மிக மோசமான போர் என தெரிவித்த ஜெலன்ஸ்கி, ரஷ்யாவிடம் உக்ரைன் எந்த பிராந்தியத்தையும் விட்டுக்கொடுக்காது என்றும் வலியுறுத்தினார். ரஷ்யாவின் முக்கிய கோரிக்கை, உக்ரைன் நேட்டோவில் சேரக்கூடாது என்பதாகும்.






