போர் நிறுத்தத்தை ரஷியா ஏற்றுக்கொள்ளும் - டிரம்ப் நம்பிக்கை

போர் நிறுத்தத்தை மீறி உக்ரைன் மீது ரஷியா தாக்கினால் பேரழிவை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறியுள்ளார்.
வாஷிங்டன்,
ரஷியா-உக்ரைன் இடையே 3 ஆண்டுகளாக நடந்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தீவிரம் காட்டி வருகிறார். அதே வேளையில் கடந்த 3 ஆண்டுகளாக அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கிய ராணுவ உதவிகளுக்கு ஈடாக உக்ரைனில் உள்ள கனிம வளங்களை அமெரிக்காவுக்கு வழங்க வேண்டும் என டிரம்ப் வலியுறுத்தி வருகிறார்.
இது தொடர்பாக கடந்த மாதம் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையே பேச்சுவார்த்தை நடந்தது.அப்போது இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதை தொடர்ந்து ஜெலன்ஸ்கி வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறினார். இந்த சம்பவத்தை தொடர்ந்து உக்ரைனுக்கு வழங்கி வந்த ராணுவ உதவிகள் அனைத்தையும் அமெரிக்கா நிறுத்தியது.
இதையடுத்து வெள்ளை மாளிகையில் நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்த ஜெலன்ஸ்கி போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சம்மதம் தெரிவித்தார். அதன்படி சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் அமெரிக்கா-உக்ரைன் இடையே வெளியுறவு மந்திரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. பேச்சுவார்த்தை முடிந்த பின் அமெரிக்கா-உக்ரைன் கூட்டு அறிக்கையை வெளியிட்டது.
அதில், "அமெரிக்காவால் முன்மொழியப்பட்ட 30 நாள் போர் நிறுத்தத்தை உடனடியாக ஏற்க உக்ரைன் தயாராக இருக்கிறது. இந்த போர் நிறுத்தக் காலம் இரு தரப்பினரின் பரஸ்பர ஒப்பந்தத்தால் நீட்டிக்கப்படலாம். இது ரஷிய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உடனேயே அமலுக்கு வரும்" என கூறப்பட்டது. இதனிடையே 30 நாள் போர்நிறுத்தம் திட்டத்திற்கு உக்ரைன் ஒப்புக்கொண்டாலும், ரஷியா அந்த திட்டத்தை இன்னும் ஆய்வு செய்து வருவதாகவும், இந்தத் திட்டம் குறித்து அமெரிக்காவிடமிருந்து விளக்கத்திற்காகக் காத்திருப்பதாகவும் ரஷியா தரப்பில் கூறப்பட்டுள்ளது. புதின்- டிரம்ப் இடையிலான பேச்சுவார்தை நடைபெற விரைவாக ஏற்பாடு செய்யப்படும் என ரஷியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி டிரம்ப் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
உக்ரைன் போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து புதினுடன் விவாதிக்க அமெரிக்க தூதர்கள் ரஷியா சென்றுள்ளனர். போர் நிறுத்த ஒப்பந்தத்தை ரஷியா ஏற்றுக்கொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளது.30 நாள் போர்நிறுத்தத்தை ரஷியா கடைப்பிடிக்கத் தவறினால், நிதி விளைவுகளை ரஷியா சந்திக்க நேரிடும். போர் நிறுத்தத்தைத் தடுப்பது ரஷியாவிற்கு பேரழிவை ஏற்படுத்தும். உக்ரைனில் தனது ராணுவத் தாக்குதலைத் நடத்தக் கூடாது. மீறினால் ரஷியா பேரழிவை சந்திக்க நேரிடும். இருப்பினும், இந்த விளைவை நான் விரும்பவில்லை, ஏனென்றால் அமைதியை அடைவதே எனது குறிக்கோள் என்றார்.
இதனிடையே போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஆய்வு செய்து வருவதாகவும், டிரம்பிற்கும் புதினுக்கும் இடையே தொலைபேசி அழைப்பு சாத்தியம் என்று கிரெம்ளின் மாளிகை கூறியுள்ளது.