பத்தனம்திட்டா தொகுதியில் என் மகன் தோற்கவேண்டும்.. ஏ.கே.அந்தோணி பரபரப்பு பேட்டி
காங்கிரஸ் தலைவர்களின் பிள்ளைகள் பா.ஜ.க.வில் இணைவது தவறான செயல் என்று ஏ.கே.அந்தோணி குறிப்பிட்டார்.
திருவனந்தபுரம்:
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஏ.கே.அந்தோணியின் மகன் அனில் அந்தோணி கடந்த ஆண்டு காங்கிரசில் இருந்து வெளியேறி, பா.ஜ.க.வில் இணைந்தார். கேரளாவைச் சேர்ந்த இவர், நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. சார்பில் பத்தனம்திட்டா தொகுதியில் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், ஏ.கே.அந்தோணி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவரது மகன் பா.ஜ.க. சார்பில் போட்டியிடுவது குறித்து செய்தியாளர்கள் அடுத்தடுத்து கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த ஏ.கே.அந்தோணி, பத்தனம்திட்டா தொகுதியில் தன் மகனின் கட்சி தோல்வி அடையவேண்டும் என்றும், அவரது போட்டியாளரான காங்கிரஸ் வேட்பாளர் ஆண்டோ அந்தோணி வெற்றி பெற வேண்டும் என்றும் கூறினார்.
காங்கிரஸ் தலைவர்களின் பிள்ளைகள் பா.ஜ.க.வில் இணைவது தவறான செயல் என்றும், காங்கிரஸ் தனது மதம் என்றும் ஏ.கே.அந்தோணி குறிப்பிட்டார்.