நாகையில் பா.ஜ.க. வேட்பாளரை வரவேற்க பட்டாசுகள் வெடித்ததில் 2 குடிசை வீடுகள் தீக்கிரை


நாகையில் பா.ஜ.க. வேட்பாளரை வரவேற்க பட்டாசுகள் வெடித்ததில் 2 குடிசை வீடுகள் தீக்கிரை
x

நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் எஸ்.ஜி.எம்.ரமேஷ் போட்டியிடுகிறார்.

நாகை,

நாகையில் பா.ஜ.க. வேட்பாளரை வரவேற்பதற்காக வைத்த பட்டாசுகள் வெடித்து சிதறியதில், சாலையோரம் இருந்த இரண்டு குடிசை வீடுகள் தீக்கிரையான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் எஸ்.ஜி.எம்.ரமேஷ் என்பவர் போட்டியிடுகிறார். அவர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் தீவிர வாக்கு சேகரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் இன்று அவர், புதிய நம்பியார் நகர் மீனவ கிராமத்திற்கு தேர்தல் பிரசாரத்திற்காக சென்றார். அப்போது பா.ஜ.க.வினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அவரை வரவேற்பதற்காக பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. இந்த பட்டாசுகள் வெடித்து சிதறிய போது, எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த குடிசை வீட்டின் மீது விழுந்தது. இதையடுத்து தீ மளமளவென பரவி வீட்டின் கூரை முழுவதும் பற்றி எரிந்தது. மேலும் அருகாமையில் உள்ள வீட்டின் கூரையின் மீதும் தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த தீ விபத்து குறித்து சம்பவ இடத்தில் ஆய்வு செய்த வருவாய் அலுவலர், வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகின. இந்த சம்பவம் நாகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 More update

Next Story