ராகுல் காந்திக்கு பாக். முன்னாள் மந்திரி ஆதரவு; நாட்டின் எதிரிகளுடன் காங்கிரஸ் கைகோர்த்துள்ளது - யோகி ஆதித்யநாத் விமர்சனம்


ராகுல் காந்திக்கு பாக். முன்னாள் மந்திரி ஆதரவு; நாட்டின் எதிரிகளுடன் காங்கிரஸ் கைகோர்த்துள்ளது - யோகி ஆதித்யநாத் விமர்சனம்
x

நாட்டின் எதிரிகளுடன் காங்கிரஸ் கட்சி கைகோர்த்துள்ளதாக உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் விமர்சித்துள்ளார்.

லக்னோ,

பாகிஸ்தான் முன்னாள் மந்திரி சவுத்ரி பவாத் ஹுசைன் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்றில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குறித்து பாராட்டி பேசியிருந்தார். இது குறித்து பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் நாட்டின் எதிரிகளுடன் காங்கிரஸ் கட்சி கைகோர்த்துள்ளதாக உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது;-

"மோடியும் பா.ஜ.க.வும் வெற்றி பெற்றால் இந்தியாவில் தீபாவளியைப் போன்ற கொண்டாட்டம் நிகழும். ஆனால் காங்கிரஸ் வெற்றி பெற்றால் பாகிஸ்தானில் கொண்டாட்டம் நிகழும். இந்த வேறுபாட்டை புரிந்து கொண்டு தேச விரோத சக்திகளை மக்கள் நிராகரிக்க வேண்டும். தேர்தல் நேரத்தில் பிரதமர் மோடிக்கு சாதகமாக இருக்கும் சூழலை சீர்குலைக்க தேச விரோத சக்திகள் முயற்சி செய்வார்கள்.

ராகுல் காந்தியை பாகிஸ்தான் எப்படி ஆதரிக்கிறது என்பதை நாட்டின் குடிமக்கள் கவனிக்க வேண்டும். புல்வாமா சம்பவத்தை வெட்கமின்றி ஆதரித்த பாகிஸ்தான் முன்னாள் மந்திரி ஒருவர், இப்போது வெளிப்படையாகவே ராகுல் காந்தியை ஆதரித்து வருகிறார். இது நாட்டின் எதிரிகளுடன் காங்கிரஸ் கட்சி கைகோர்த்திருப்பதைக் காட்டுகிறது.

சுதந்திரத்திற்குப் பிறகு காங்கிரஸ் அதன் பாதையில் இருந்து விலகிச் சென்றது. சுயநலத்தால் தூண்டப்பட்டு, பிரிவினையை வளர்த்து, அரசியல் ஆதாயத்திற்காக சமரச கொள்கைகளை பின்பற்றியது. இதன் பாதகமான விளைவு என்னவென்றால், நாட்டிற்குள் பிரிவினைவாதமும், பயங்கரவாதமும் உச்சத்தை எட்டியது. மேலும், காங்கிரஸ் அரசின் ஊழல் நடவடிக்கைகளால் நக்சல் பயங்கரவாதம் வேகமாக பரவியது. கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சிகளால் பயங்கரவாதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் விளைவாக நாட்டில் தற்போது வளர்ச்சிக்கு சாதகமான சூழல் உருவாகியுள்ளது. மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளவர்கள் கூட அரசின் முயற்சிகளால் பயனடைகிறார்கள். இதனால் பொதுமக்கள் பிரதமர் மோடியை விரும்புகிறார்கள். காங்கிரஸ் மற்றும் 'இந்தியா' கூட்டணியின் பிளவுபடுத்தும் கொள்கைகளை மக்கள் நிராகரிப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். மேலும் மோடி தலைமையில் பா.ஜனதா மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றியை உறுதிசெய்து, வலுவான பெரும்பான்மையுடன் மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்கும்."

இவ்வாறு யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.


Next Story