'காங்கிரஸ் கட்சி மக்களைப் பிரித்து வாக்கு வங்கி அரசியல் செய்தது' - ஜே.பி.நட்டா


காங்கிரஸ் கட்சி மக்களைப் பிரித்து வாக்கு வங்கி அரசியல் செய்தது - ஜே.பி.நட்டா
x
தினத்தந்தி 12 April 2024 9:38 AM GMT (Updated: 12 April 2024 10:22 AM GMT)

மக்களை தவறாக வழிநடத்தி இனி வாக்கு வங்கி அரசியல் செய்ய முடியாது என ஜே.பி.நட்டா தெரிவித்தார்.

போபால்,

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் 19-ந்தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள 29 மக்களவை தொகுதிகளுக்கு ஏப்ரல் 19, ஏப்ரல் 26, மே 7 மற்றும் மே 13 ஆகிய தேதிகளில் 4 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இதனை முன்னிட்டு அங்கு அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய பிரதேசத்தின் சித்தி மாவட்டத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அங்கு நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது;-

"முன்பு காங்கிரஸ் கட்சி மக்களைப் பிரித்து வாக்கு வங்கி அரசியல் செய்தது. அனைவரிடம் இருந்தும் வாக்குகளை பெற்றுக் கொண்டு குறிப்பிட்ட சில சாதி, சமுதாயம் அல்லது பிரிவுகளுக்காக மட்டும் அரசாங்கத்தை அமைத்தது. அது அனைவருக்குமான அரசாக இருக்கவில்லை.

ஆனால் பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டுகளில் இந்திய அரசியலின் வரையறையை மாற்றிவிட்டார். தற்போது மக்களை தவறாக வழிநடத்தி வாக்கு வங்கி அரசியல் செய்ய முடியாது. சாதி மற்றும் வகுப்புவாத அரசியலை இனி செய்ய முடியாது.

தற்போது நடைபெறும் அரசியல், வளர்ச்சிக்கான அரசியலாகும். நீங்கள் செய்த பணிகளை மக்களிடம் எடுத்துக்கூற வேண்டும். உங்கள் பணிகளின் அடிப்படையில்தான் மக்கள் உங்கள் எதிர்காலத்தை முடிவு செய்வார்கள்."

இவ்வாறு ஜே.பி.நட்டா தெரிவித்தார்.


Next Story