100 நாள் வேலை ஊதியம் ரூ.400ஆக உயர்த்தப்படும்: ராகுல்காந்தி
உத்தர பிரதேசத்தில் பா.ஜனதா ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெறும் என்று ராகுல்காந்தி கூறினார்.
லக்னோ,
நாடாளுமன்ற தேர்தலின் 6வது கட்ட வாக்குப்பதிவு மே 25-ம் தேதி நடைபெற உள்ளது. பிரயாக்ராஜ் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் உஜ்வல் ராமன் சிங் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக பா.ஜ.க.,வின் நீரஜ் திரிபாதி களத்தில் உள்ளார். இந்தநிலையில், பிரயாக்ராஜில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுடன் இணைந்து தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் வேட்பாளர் உஜ்வல் ராமனை ஆதரித்து பேசிய ராகுல் காந்தி,
"உத்தர பிரதேசத்தில் பா.ஜனதா ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெறும், அந்தத் தொகுதி பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி மட்டும்தான். இந்த மக்களவைத் தேர்தல் அரசியலமைப்புச் சட்டத்தைக் காப்பாற்றுவதற்கான போராட்டம். எந்த சக்தியாலும் அரசியலமைப்பைக் கிழித்து எறிய முடியாது.
பண்ணை விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு நாங்கள் ஒரு சட்டத்தை உருவாக்கவுள்ளோம். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் மகாத்மா காந்தி ஊரக வேலைத்திட்டத்தின் ஊதியம் ரூ.400 ஆக உயர்த்தி தரப்படும். அங்கன்வாடி ஊழியர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் தரப்படும். விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். படித்த ஒவ்வொரு இளைஞர்களுக்கும் வேலை உறுதி செய்யப்படும். ராணுவத்தில் மீண்டும் பழைய ஆள்சேர்ப்பு நடைமுறை கொண்டுவரப்படும் என்றார்.