'தேர்தலுக்குப் பிறகு எதிர்கட்சி அந்தஸ்தை காங்கிரஸ் இழக்கும்' - பிரதமர் மோடி


எதிர்கட்சி அந்தஸ்தை பெறும் அளவிற்கு 10 சதவிகித இடங்களில் கூட காங்கிரஸ் கட்சி வெற்றி பெறாது என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

புவனேஸ்வர்,

ஒடிசா மாநிலத்தில் உள்ள கந்தமால் மற்றும் போலாங்கிர் மக்களவை தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு, பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது;-

"ஒடிசாவின் பெருமை ஆபத்தில் உள்ளது, அதை பா.ஜ.க. பாதுகாக்கும். பா.ஜ.க.வின் இரட்டை இன்ஜின் அரசாங்கம் ஒடிசாவில் அமைக்கப்படும்போது, ஒடியா மொழியை அறிந்த மண்ணின் மகன் அல்லது மகள் இந்த மாநிலத்தின் முதல்-அமைச்சராக்கப்படுவார்.

மக்களவை தேர்தலுக்குப் பிறகு எதிர்கட்சி அந்தஸ்தை பெறும் அளவிற்கு 10 சதவிகித இடங்களில் கூட காங்கிரஸ் கட்சி வெற்றி பெறாது. 50 தொகுதிகளில் கூட காங்கிரஸ் கட்சியால் வெற்றி பெற முடியாது. நான் சொல்வதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள், இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று அனைத்து சாதனைகளையும் முறியடிக்கும்.

26 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் நடத்தப்பட்ட பொக்ரான் சோதனை உலக அளவில் இந்தியாவின் மதிப்பை உயர்த்தியது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டியதன் மூலம் மக்களின் 500 ஆண்டுகால காத்திருப்புக்கு பா.ஜ.க. அரசு முடிவு கட்டியது.

ஒடிசாவின் பழங்குடியினத்தைச் சேர்ந்த மகளை இந்தியாவின் ஜனாதிபதியாக, முப்படைகளின் தலைமைத் தளபதியாக ஆக்கியது பா.ஜ.க. அரசு. ஒடிசா ஒரு செழிப்பான மாநிலம். ஆனால் இங்கு பெரும்பாலான மக்கள் ஏழைகளாக இருக்கின்றனர். இதற்கு காரணமானவர்களை ஆட்சியில் இருந்து தூக்கி எறிய வேண்டும்."

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


Next Story