மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் குறைபாடு - சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. ரிட் மனு தாக்கல்


மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் குறைபாடு - சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. ரிட் மனு தாக்கல்
x
தினத்தந்தி 2 April 2024 1:25 PM GMT (Updated: 2 April 2024 2:52 PM GMT)

தமிழகத்தில், நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19-ந்தேதி நடக்கிறது.

சென்னை,

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள குறைபாடுகளை சரிசெய்ய வேண்டும் என்று தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை ஐகோர்ட்டில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், "கடந்த 1950 முதல் 1990 வரை தேர்தல்களில் வாக்குச்சீட்டு நடைமுறை பின்பற்றப்பட்டு வந்தது. அதன் பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. சமீப காலமாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் பயன்பாடு குறித்து சமூகத்தின் அனைத்து பிரிவினரும் சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் பதிவான வாக்குக்கும், எண்ணப்பட்ட வாக்குக்கும் இடையில் குறைபாடுகள் இருப்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. தேர்தலை நியாயமான முறையில் நடத்த வாக்குப் பதிவு இயந்திரங்கள் முறையாக, வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுடன் ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தை இணைப்பது தேர்தல் ஆணைய விதிகளுக்கு முரணானது. வாக்குப் பதிவு இயந்திரத்தின் கட்டுப்பாட்டு இயந்திரத்துக்கும், வாக்குப் பதிவு இயந்திரத்துக்கும் இடையில் அச்சு இயந்திரங்கள் வைக்க எந்த விதிகளும் வகை செய்யவில்லை. அவ்வாறு வைப்பது முறைகேடுகளுக்கு வழிவகுக்கும். மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை நிபுணர்கள் கொண்டு சோதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த நடவடிக்கைகளை பொது மக்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மேற்கொள்வதில்லை.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் குறித்து மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு ஒப்புதல் வழங்க உரிய விதிகளை வகுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். வாக்குப் பதிவு இயந்திரத்துக்கும், கட்டுப்பாட்டு இயந்திரத்துக்கும் இடையில் அச்சு இயந்திரத்தை வைக்க கூடாது என உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story