திருச்சியில் ஜே.பி.நட்டாவின் வாகன பேரணிக்கு போலீசார் அனுமதி


திருச்சியில் ஜே.பி.நட்டாவின் வாகன பேரணிக்கு போலீசார் அனுமதி
x
தினத்தந்தி 6 April 2024 7:44 AM GMT (Updated: 6 April 2024 11:56 AM GMT)

திருச்சி,

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க. மூத்த தலைவர்கள் பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர்.

இந்த நிலையில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை தேனியில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். இதற்காக விமானம் மூலம் இன்று இரவு அவர் திருச்சிக்கு வருகிறார். இதனிடையே திருச்சி காந்தி மார்க்கெட்டில் இருந்து மலைக்கோட்டை வரை ரோடு ஷோ நடத்தி வாக்கு சேகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சியினர் இதற்காக திருச்சி மாநகர காவல் துறையிடம் அனுமதி கேட்டனர். அதற்கு போலீஸ் கமிஷனர் அனுமதி மறுத்தார். ரோடு ஷோவுக்கான அனுமதி கேட்கப்பட்ட பகுதி போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதி. பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்தக்கூடிய பகுதி என்பதால் ரோடு ஷோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

இந்த நிலையில், ஜேபி நட்டா வாகன பேரணிக்கு போலீசார் தற்போது அனுமதி அளித்துள்ளனர். காந்தி பெரியகடை வீதி வழியாக மலைக்கோட்டை வரை பேரணியாக செல்ல போலீசார் அனுமதி வழங்கியுள்ளார்கள்.


Next Story