பா.ஜ.க.வின் துணை அமைப்பாக தேர்தல் ஆணையம் மாறிவிட்டதா? - டெல்லி மந்திரி அதிஷி கேள்வி


பா.ஜ.க.வின் துணை அமைப்பாக தேர்தல் ஆணையம் மாறிவிட்டதா? - டெல்லி மந்திரி அதிஷி கேள்வி
x
தினத்தந்தி 5 April 2024 12:07 PM GMT (Updated: 5 April 2024 12:16 PM GMT)

பா.ஜ.க.வின் துணை அமைப்பாக தேர்தல் ஆணையம் மாறிவிட்டதா? என்று டெல்லி மந்திரி அதிஷி கேள்வி எழுப்பியுள்ளார்.

புதுடெல்லி,

டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கைது தொடர்பாக பத்திரிகையாளர்களிடம் பேசிய டெல்லி கல்வி மந்திரியும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான அதிஷி, பா.ஜ.க.வில் சேருங்கள் அல்லது ஒரு மாதத்துக்குள் அமலாக்கத்துறையால் கைது செய்யப்படுவீர்கள் என்று தனக்கு மிரட்டல் வந்ததாக பரபரப்பு குற்றம் சாட்டினார்.

மேலும் தான் உள்பட 4 ஆம் ஆத்மி தலைவர்கள் விரைவில் கைது செய்யப்பட இருப்பதாகவும் அதிஷி தெரிவித்தார். இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஆம் ஆத்மி மந்திரி அதிஷிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த நிலையில், இது தொடர்பாக டெல்லி அமைச்சரும், ஆம் ஆத்மி மூத்த தலைவருமான அதிஷி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

ஊடகங்களில் பா.ஜ.க. வெளியிட்ட அரை மணி நேரத்திற்கு பின்புதான் தேர்தல் ஆணையத்தின் நோட்டீஸ் எனக்கு மின்னஞ்சல் மூலம் வந்தது. பா.ஜ.க. புகார் கொடுத்தால் மட்டும் விரைந்து ஆணையம் நடவடிக்கை எடுக்கிறது. பா.ஜ.க. புகார் அளித்த 12 மணி நேரத்திற்குள் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புகிறது. தேர்தல் ஆணையம் பாஜகவின் துணை அமைப்பாக மாறிவிட்டதா என்பதுதான் எனது கேள்வி.

அனைத்து மத்திய புலனாய்வு அமைப்புகளும் பா.ஜ.க.விடம் அடி பணிந்துவிட்டன என்பது கவலை அளிக்கிறது. தற்போது இந்த பட்டியலில் தேர்தல் ஆணையமும் இணைந்துள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் பல்வேறு பிரச்சினைகள் குறித்த புகார்களை பதிவு செய்ய முயற்சித்தும் தேர்தல் ஆணையம் அவகாசம் வழங்கவில்லை. மத்திய அமைப்புகள் எதிர்க்கட்சித் தலைவர்களைக் குறிவைத்து வருகின்றன, ஆனால் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story