'பா.ஜ.க.வின் கொள்கைகளால் சிறுதொழில்களுக்கு மிகப்பெரிய நஷ்டம்' - பிரியங்கா காந்தி விமர்சனம்
பா.ஜ.க.வின் கொள்கைகளால் சிறுதொழில்களுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது என பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.
சிம்லா,
இமாச்சல பிரதேச மாநிலம் மண்டி தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர் விக்கிரமாதித்யா சிங்கை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது;-
"மோடியின் ஆட்சிக்காலத்தில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் பணிகள் முற்றிலும் நின்றுவிட்டன. கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக மோசமான வேலைவாய்ப்பின்மையை நமது நாடு தற்போது சந்தித்து வருகிறது. சுமார் 70 கோடி இளைஞர்கள் வேலையின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையை மாற்ற வேண்டும் என்றால், பா.ஜ.க.வின் ஆட்சியை மாற்ற வேண்டும். பா.ஜ.க.வின் கொள்கைகளால் சிறுதொழில்களுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி. போன்ற நடவடிக்கைகளால் சுற்றுலாத்துறை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
'இந்தியா' கூட்டணி ஆட்சிக்கு வந்தால், நாட்டின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை பலப்படுத்துவோம். இந்த நிறுவனங்கள்தான் அதிக வேலைவாய்ப்புகளை வழங்குகின்றன. பா.ஜ.க.வின் கொள்கைகள் ஒரு சில கோடீஸ்வரர்களை மட்டுமே பலப்படுத்துகின்றன.
இமாச்சல பிரதேசத்தில் இருந்து ஏராளமான இளைஞர்கள் ராணுவத்தில் சேர்ந்து நமது நாட்டைக் காக்கின்றனர். ஆனால் பிரதமர் மோடி 'அக்னிவீர்' என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளார். பணியின்போது அக்னிவீரர் ஒருவர் உயிரிழந்துவிட்டால் அவருக்கு தியாகி அந்தஸ்து கிடைக்காது. அவரது பெற்றோருக்கு ஓய்வூதியம் கூட கிடைக்காது."
இவ்வாறு பிரியங்கா காந்தி தெரிவித்தார்.