பா.ஜனதா 220க்கும் குறைவான இடங்களையே பெறும் - அரவிந்த் கெஜ்ரிவால்


அரவிந்த் கெஜ்ரிவால், அகிலேஷ் யாதவ், உத்தரபிரதேசம்
x
தினத்தந்தி 16 May 2024 11:37 AM IST (Updated: 16 May 2024 11:52 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜ.க. 220க்கும் குறைவான தொகுதிகளிலேயே வெற்றிபெறும் என டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சமாஜ்வாதி கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவும், டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலும் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது கெஜ்ரிவால் பேசியதாவது,

நான் இந்தியா கூட்டணிக்கு வாக்கு கேட்டு உத்தரபிரதேசத்திற்கு வந்துள்ளேன். 4 முக்கிய விஷயங்களை பற்றி பேச விரும்புகிறேன். முதலாவது, இந்த தேர்தலில் பிரதமர் மோடி அமித்ஷாவை பிரதமராக்க வாக்கு கேட்கிறார். அடுத்தாண்டு செப்டம்பர் 17ம் தேதியுடன் பிரதமர் மோடிக்கு 75 வயதாகிவிடும். அதன்பிறகு நாட்டின் பிரதமராக அமித்ஷாவுக்கு வழிவிட மோடி முடிவெடுத்துள்ளார். 75 வயதுடன் ஓய்வு பெற மாட்டேன் என்று பிரதமர் இதுவரை சொல்லவில்லை.

இரண்டாவது, இந்த தேர்தலில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் 3 மாதங்களில் உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பதவியிலிருந்து நீக்கப்படுவார். மூன்றாவது, அரசியல் அமைப்பை பா.ஜ.க. மாற்ற போகிறது, மேலும் எஸ்.சி, எஸ்.டி. இடஒதுக்கீட்டை ரத்து செய்ய முயற்சிக்கின்றனர். நான்காவது, ஜூன் 4ம் தேதி இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.

தற்போதைய நிலவரப்படி பா.ஜ.க. 220-க்கும் குறைவான இடங்களையே பெறும். அரியானா, டெல்லி, பஞ்சாப், கர்நாடகா, மராட்டியம், மேற்குவங்காளம், உ.பி., பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் பா.ஜ.க.வின் வெற்றி வாய்ப்பு குறையும். பா.ஜ.க. மீண்டும் ஆட்சி அமைக்காது. இந்தியா கூட்டணி தான் ஆட்சி அமைக்கப் போகிறது." இவ்வாறு அவர் பேசினார்.

இதனை தொடர்ந்து, அகிலேஷ் யாதவ் கூறுகையில், மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் பா.ஜ.க.விற்கு 143 தொகுதிகளுக்கு மேல் கிடைக்காது என்றார்.


Next Story