மோடி மீண்டும் பிரதமராக விரலை வெட்டி ரத்த அபிஷேகம்: பா.ஜ.க. தீவிர ஆதரவாளர் நூதன வழிபாடு
மோடி மீண்டும் பிரதமராக வேண்டி பா.ஜ.க. ஆதரவாளர் தனது விரலை வெட்டி கடவுள் காளிதேவிக்கு ரத்த அபிஷேகம் செய்துள்ளார்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் உத்தரகன்னடா மாவட்டம் கார்வார் சோனார்வாடா பகுதியை சேர்ந்தவர் அருண் வார்னேகர். பா.ஜ.க.வை சேர்ந்த இவர் பிரதமர் மோடியின் தீவிர ஆதரவாளராக இருந்து வருகிறார். இவர் மோடி மீதான அளவுகடந்த அன்பால் தனது வீட்டில் மோடிக்காக கோவில் கட்டி, தினமும் பூஜை செய்து வழிபாடு நடத்தி வருகிறார்.
கடந்த 2014ம் ஆண்டு முதல் முறையாக நாடாளுமன்ற தேர்தலில் மோடி பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட போது, அவர் பிரதமராக வேண்டி அருண் தனது விரலை வெட்டி, ரத்தத்தால் இந்து மதக்கடவுள் காளிதேவிக்கு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினார். அந்த தேர்தலில் மோடி அமோக வெற்றி பெற்றதுடன், அவரது தலைமையில் மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தது.
அதுபோல் 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போதும் மோடி பிரதமராக வேண்டி தனது விரலை வெட்டி காளி தேவிக்கு ரத்த அபிஷேகம் செய்ததுடன், பிரதமர் மோடியின் படத்திலும், சாய்பாபா படத்திலும் ரத்தத்தால் மோடி பிரதமராக வர வேண்டும் என்று எழுதி நூதன வேண்டுதல் விடுத்திருந்தார். அந்த தேர்தலிலும் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்று பிரதமராக 2வது முறையாக மோடி பதவி ஏற்றார்.
இந்த நிலையில் தற்போது நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலிலும் வெற்றிபெற்று மீண்டும் மோடி பிரதமராக வேண்டி தனது இடது கை விரலை வெட்டி காளி தேவிக்கு அருண் வார்னேகர் ரத்த அபிஷேகம் செய்துள்ளார்.
அத்துடன் வீட்டில் உள்ள மோடி கோவிலின் சுவரில் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வேண்டும், 378க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றும் ரத்தத்தில் எழுதியுள்ளார்.
பிரதமர் மோடியின் படத்தை அருண் தனது மார்பில் பச்சை குத்தியுள்ளார். அருண் இந்தி திரையுலகில் ஸ்டண்ட் கலைஞராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.