திரிபுராவில் மக்களவை, சட்டசபை இடைத்தேர்தல்; பா.ஜ.க. பிரசாரகர்கள் பட்டியல் வெளியீடு


திரிபுராவில் மக்களவை, சட்டசபை இடைத்தேர்தல்; பா.ஜ.க. பிரசாரகர்கள் பட்டியல் வெளியீடு
x

திரிபுராவில் கடந்த 2014 மக்களவை தேர்தலின்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. ஜூன் 4-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனை தொடர்ந்து, அரசியல் கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, தீவிர பிரசார பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

இதில், திரிபுராவில் உள்ள 2 மக்களவை தொகுதிகளான மேற்கு திரிபுரா மற்றும் கிழக்கு திரிபுரா தொகுதிகளுக்கு முறையே, ஏப்ரல் 19 மற்றும் ஏப்ரல் 26 ஆகிய இரு நாட்களில் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும்.

இந்த நிலையில், திரிபுராவில் மக்களவை தேர்தல் மற்றும் 7-ராம்நகர் என்ற ஒரு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் ஆகியவற்றுக்கான பிரசாரகர்களின் பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டு உள்ளது.

இதன்படி, பிரதமர் மோடி, பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, மத்திய போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்கரி உள்ளிட்டோர் பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர்.

இந்த பட்டியலில் உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், அசாம் முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா உள்ளிட்டோரும் மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி, ஹேமமாலினி, அக்னிமித்ரா பால் உள்ளிட்டோரும் இடம் பெற்றிருக்கின்றனர். கடந்த 2014 மக்களவை தேர்தலின்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தது.


Next Story