நாடாளுமன்ற தேர்தல்: தூத்துக்குடி தொகுதி பற்றிய முழு அலசல்


நாடாளுமன்ற தேர்தல்:   தூத்துக்குடி தொகுதி பற்றிய முழு அலசல்
x
தினத்தந்தி 28 March 2024 9:12 AM GMT (Updated: 28 March 2024 10:34 AM GMT)

தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு 3 தேர்தல்களை சந்தித்த தூத்துக்குடி தற்போது 4-வது தேர்தலை எதிர்கொள்கிறது.

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி 6 சட்டமன்ற தொகுதிகளை ஒருங்கிணைத்து தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் ஒரு தொகுதியாக மாற்றப்பட்டு உள்ளது. கடந்த காலங்களில் தூத்துக்குடி மாவட்டம் 3 நாடாளுமன்ற தொகுதிகளுடன் இணைந்து இருந்தது. இந்த குளறுபடிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தொகுதி மறுசீரமைப்பின்போது மாவட்டத்தின் அனைத்து பகுதிகளும் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்குள் கொண்டு வரப்பட்டது. அதன்படி, தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம், கோவில்பட்டி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

கனிமொழி எம்.பி.

தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு 3 தேர்தல்களை சந்தித்த தூத்துக்குடி தற்போது 4-வது தேர்தலை எதிர்கொள்கிறது. தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு நடந்த முதலாவது தேர்தலில் தி.மு.க.வைச் சேர்ந்த எஸ்.ஆர்.ஜெயதுரையும், 2-வது தேர்தலில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜியும், 3-வது தேர்தலில் தி.மு.க. தலைவர் மறைந்த கருணாநிதியின் மகளும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் தங்கையுமான கனிமொழி வெற்றி பெற்று எம்.பி.யாக உள்ளார். நட்சத்திர அந்தஸ்து பெற்ற தொகுதியான தூத்துக்குடியில் மீண்டும் தி.மு.க. சார்பில் கனிமொழி எம்.பி. களம் காண்கிறார்.

சாதி வாரியாக..

தூத்துக்குடி தொகுதியில் பல்வேறு சாதிகளைச் சேர்ந்த வாக்காளர்களும் நிரம்பி உள்ளனர். இங்கு இந்துக்கள் 72 சதவீதமும், கிறிஸ்தவர்கள் 21 சதவீதமும், முஸ்லிம்கள் 7 சதவீதமும் உள்ளனர்.

நாடார் சமூகத்தினர் 25 சதவீதம் பேரும், ஆதிதிராவிடர் வகுப்பினர் 21.5 சதவீதம் பேரும், தேவர் 10 சதவீதம் பேரும், நாயக்கர் 7 சதவீதம் பேரும், பிள்ளைமார், பெர்னாண்டோ, யாதவர் தலா 5 சதவீதம் பேரும், ஆசாரி சமூகத்தினர் 2 சதவீதம் பேரும், ரெட்டியார் சமூகத்தை சேர்ந்தவர்கள் 3 சதவீதம் பேரும், அருந்ததியர் 2.5 சதவீதம் பேரும், செட்டியார், மூப்பனார், வண்ணார் தலா 1 சதவீதமும், முதலியார், அய்யர், மருத்துவர் தலா ½ சதவீதமும், இதர பிரிவினர் 1½ சதவீதமும் இருப்பதாக கூறப்படுகிறது.

தொழில் நகரம்

தொழில் நகரமாக சிறப்புற்று திகழும் தூத்துக்குடி தமிழகத்தின் 2-வது துறைமுக நகரமாகவும் விளங்குகிறது. சாலை, ரெயில், விமானம், கப்பல் ஆகிய அனைத்து போக்குவரத்து வசதியும் கொண்ட தொகுதியாக உள்ளதால் தொழில்கள் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகின்றன.

மகாகவி சுப்பிரமணிய பாரதியார், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார், வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற எண்ணற்ற சுதந்திர போராட்ட வீரர்களை தந்த தியாக பூமியாகவும் ஒளி வீசுகிறது. நவதிருப்பதி, நவக்கைலாயம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், தூத்துக்குடி பனிமயமாதா ஆலயம் போன்ற பல புகழ்பெற்ற ஆன்மிக தலங்களையும் தன்னகத்தே கொண்டது.

கடற்கரை கிராமங்கள்

போக்குவரத்து வசதிமிக்க தூத்துக்குடி மாநகர் சென்னைக்கு அடுத்தபடியாக பல்வேறு வளர்ச்சிகளை பெற்று தொழில்நகரமாக உருவெடுத்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தின் பிரதான தொழிலாக விவசாயம், மீன்பிடி தொழில், உப்புத் தொழில் விளங்குகிறது. நீண்ட கடற்கரையை கொண்டு உள்ள தூத்துக்குடி தொகுதியில் கடற்கரை கிராமங்கள் அதிக அளவில் உள்ளன.

தூத்துக்குடியை சுற்றி பல்வேறு தொழிற்சாலைகள் உருவாகி உள்ளன. மின்சார கார் தயாரிப்பு தொழிற்சாலை, பர்னிச்சர் பார்க், டைட்டல் பார்க் உள்ளிட்டவை கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. குலசேகரன்பட்டினத்தில் இஸ்ரோ சார்பில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படுகிறது. இதனால் தூத்துக்குடி தொகுதி வேகமான வளர்ச்சியை நோக்கி செல்கிறது.

மக்கள் கோரிக்கை

பெருவளர்ச்சி அடைந்து வரும் தூத்துக்குடியில் நீண்டகாலமாக தீர்க்கப்படாத சில பிரச்சினைகளும் நிலவி வருகின்றன. தூத்துக்குடியில் இருந்து ரெயில் சேவையை அதிகரிக்க வேண்டும். தூத்துக்குடி, விளாத்திகுளம் வழியாக மதுரைக்கு ரெயில் பாதை பணிகளை விரைவுபடுத்த வேண்டும். மாநகராட்சிக்கு உரிய அனைத்து வசதிகளும் முறையாக செய்யப்பட வேண்டும். சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாத தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும்.

தூத்துக்குடி நகரில் போக்குவரத்து நெருக்கடியை தீர்க்க 1-ம் கேட் மற்றும் 2-ம் கேட் பகுதியில் மேம்பாலம், சுரங்கப்பாதை அமைக்கும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். வி.வி.டி. சந்திப்பில் மேம்பாலம் அமைக்கும் திட்டத்தை விரைவாக செயல்படுத்த வேண்டும் என்பது மக்களின் பிரதான கோரிக்கைகளாக உள்ளன.

புதிய தொழிற்சாலை

மேலும் கோவில்பட்டி தொகுதியை பொறுத்தவரை, மாவட்டமாக தரம் உயர்த்த வேண்டும். தீப்பெட்டிக்கான மூலப்பொருட்களை சிட்கோ மூலம் வழங்க வேண்டும். புதிய பஸ்நிலையம் கடந்த 2007-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதுவரை அந்த பஸ் நிலையம் செயல்பாடு இன்றி உள்ளது. அதனை சீராக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். தீப்பெட்டி தொழிலுக்கான வங்கி கடன் வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும். கயத்தாறு ஊருக்குள் இரவில் பஸ்கள் சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விளாத்திகுளம் தொகுதிக்கு உட்பட்ட எட்டயபுரத்தில் உள்ள 4 வழிச்சாலையில் மேம்பாலம் அமைக்க வேண்டும். விளாத்திகுளத்தில் புதிய தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும். கீழவைப்பார் உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் தூண்டில் வளைவு முறையாக அமைக்க வேண்டும். இருக்கன்குடி அணையில் இருந்து தண்ணீர் வரும் கால்வாய்களை சீரமைக்க வேண்டும். பம்பை- அச்சன்கோவில்- வைப்பாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்தினால் வறட்சியான கோவில்பட்டி, எட்டயபுரம், விளாத்திகுளம் பகுதி பயன்பெறும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

பாதுகாக்கப்பட்ட குடிநீர்

ஓட்டப்பிடாரம் கொம்பாடி அணையில் தடுப்பணை அமைத்து பெரிய குளத்துக்கு தண்ணீர் கொண்டு செல்ல வேண்டும். ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு உட்பட்ட புதியம்புத்தூரில் ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் அதிகமாக உள்ளன. அங்கு மக்களின் மேம்பாட்டுக்கு புதிய ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும். சீவலப்பேரி கூட்டு குடிநீர் பெரும்பாலான கிராமங்களுக்கு செல்லவில்லை. இதனால் சிறுநீரக கோளாறு அதிகமாக உள்ளது. இதனை தடுக்க பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும். ஓட்டப்பிடாரத்தில் கோர்ட்டுக்கு சொந்த கட்டிடம் கட்ட வேண்டும். பஸ் நிலையத்தை திறந்து செயல்பட வைக்க வேண்டும்.

ஓட்டப்பிடாரம் தொகுதியில் ஒரு பேரூராட்சி கூட இல்லை. இதனால் முக்கிய ஊர்களை பேரூராட்சியாக மாற்ற வேண்டும். போக்குவரத்து கழக டெப்போ அமைக்க வேண்டும். அரசு கல்லூரி, மகளிர் போலீஸ் நிலையம், துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி ஆன்மிக தலமாக விளங்கி வருகிறது. இந்த பகுதியில் சுற்றுலா தலங்களை மேம்படுத்த வேண்டும். ஸ்ரீவைகுண்டம் தொகுதியில், தாமிரபரணி ஆற்றின் கடைசி அணைக்கட்டான ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டை தூர்வார வேண்டும். தாமிரபரணி பாசனத்தில் உள்ள 53 குளங்களையும் நீண்ட காலமாக தூர்வாராமல் இருப்பதால் மழைக்காலங்களில் ஆற்றில் வரும் தண்ணீரை சேமிக்க முடியாமல் கடலுக்கு வீணாக செல்கிறது. ஆகையால் குளங்களை தூர்வார வேண்டும். விவசாயத்துக்கு முறையாக தண்ணீர் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் முடிவு எப்படி?

கடந்த 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கனிமொழி எம்.பி. 3,47,209 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். முதல் 5 இடங்களை பிடித்தவர்கள் விவரம்:-

கனிமொழி (தி.மு.க.) 5,63,143

தமிழிசை சவுந்தரராஜன் (பா.ஜனதா) 2,15,934

புவனேஸ்வரன் (அ.ம.மு.க.) 76,866

கிறிஸ்டன்டைன் ராஜசேகர் (நாம் தமிழர்) 49,222

பொன்குமரன் (மக்கள் நீதி மய்யம்) 25,702

வாக்காளர்கள் விவரம்

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் 7 லட்சத்து 8 ஆயிரத்து 244 ஆண்கள், 7 லட்சத்து 39 ஆயிரத்து 720 பெண்கள், 215 திருநங்கை ஆக மொத்தம் 14 லட்சத்து 48 ஆயிரத்து 179 வாக்காளர்கள் உள்ளனர். இதில் புதிதாக 25 ஆயிரத்து 196 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை விவரம் வருமாறு:-

தூத்துக்குடி 2,80,125

விளாத்திகுளம் 2,09,472

திருச்செந்தூர் 2,39,884

ஸ்ரீவைகுண்டம் 2,22,393

ஓட்டப்பிடாரம் 2,43,168

கோவில்பட்டி 2,53,137


Next Story