நாடாளுமன்ற தேர்தல்: தொகுதி கண்ணோட்டம்- நெல்லை


நாடாளுமன்ற தேர்தல்: தொகுதி கண்ணோட்டம்- நெல்லை
x

நெல்லை தொகுதியில் 7 முறை அ.தி.மு.க.வும், 5 முறை காங்கிரஸ் கட்சியும், 3 முறை தி.மு.க.வும், தலா ஒரு முறை இந்திய கம்யூனிஸ்டு கட்சி, சுதந்திரா கட்சியும் வெற்றிவாகை சூடியுள்ளது.

விவசாயமே பிரதான தொழிலாக உள்ள நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் விவசாயிகள் அதிகளவில் வசிக்கின்றனர். இந்த நாடாளுமன்ற தொகுதியானது நெல்லை, பாளையங்கோட்டை, அம்பை, ஆலங்குளம், நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது ஆகும்.

இதுவரை 17 நாடாளுமன்ற தேர்தலை சந்தித்துள்ள நெல்லை தொகுதியில் 7 முறை அ.தி.மு.க.வும், 5 முறை காங்கிரஸ் கட்சியும், 3 முறை தி.மு.க.வும், தலா ஒரு முறை இந்திய கம்யூனிஸ்டு கட்சி, சுதந்திரா கட்சியும் வெற்றிவாகை சூடியுள்ளது.

காங்கிரஸ் ஹாட்ரிக் வெற்றி

1952-ம் ஆண்டு நடந்த முதலாவது நாடாளுமன்ற தேர்தலில் நெல்லை தொகுதியில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட தாணுபிள்ளை வெற்றி பெற்றார். 1957-ம் ஆண்டு நடந்த தேர்தலிலும் இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அவர் மீண்டும் வாகை சூடினார்.

1962-ம் ஆண்டு நடந்த தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட முத்தையா வெற்றி கண்டார். இங்கு தொடர்ந்து 3 முறை காங்கிரஸ் ஹாட்ரிக் வெற்றியை பெற்றது. 1967-ம் ஆண்டு நடந்த தேர்தலில் சுதந்திரா கட்சி வேட்பாளர் சேவியர் வெற்றி பெற்றார். 1971-ம் ஆண்டு நடந்த தேர்தலில் இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் முருகானந்தம் வென்றார்.

ஆதிக்கம் செலுத்திய அ.தி.மு.க.

1977-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஆலடி அருணா வெற்றி பெற்றார். 1980-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் சிவப்பிரகாசம் வாகை சூடினார். 1984-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கடம்பூர் ஜனார்த்தனன் வெற்றி பெற்றார். தொடர்ந்து அவர் 1989, 1991-ம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களிலும் வென்றார். இதன்மூலம் தொடர்ந்து 3 முறை நெல்லை தொகுதியை அ.தி.மு.க. கைப்பற்றியது.

பின்னர் 1996-ம் ஆண்டு நடந்த தேர்தலில் நெல்லை தொகுதியை தி.மு.க. மீண்டும் கைப்பற்றியது. தி.மு.க. வேட்பாளர் சிவப்பிரகாசம், அ.தி.மு.க. வேட்பாளர் ராஜசெல்வதை தோற்கடித்து வெற்றி பெற்றார்.1998-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சரத்குமாரை அ.தி.மு.க. வேட்பாளர் கடம்பூர் ஜனார்த்தனன் தோற்கடித்து வெற்றி பெற்றார். அதன்பிறகு 1999-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் பி.எச்.பாண்டியன் வெற்றி பெற்றார்.

மீண்டும் வென்ற காங்கிரஸ்

2004-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நெல்லை தொகுதியை கைப்பற்றியது. காங்கிரஸ் வேட்பாளர் தனுஷ்கோடி ஆதித்தன் வெற்றிவாகை சூடினார். 2009-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் வெற்றி பெற்றது. காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.எஸ்.ராமசுப்பு வெற்றி பெற்றார். 2014-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கே.ஆர்.பி. பிரபாகரன் வெற்றி கண்டாா்.கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஞானதிரவியம் 5 லட்சத்து 22 ஆயிரத்து 623 ஓட்டுகள் பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ் பாண்டியன் 3 லட்சத்து 37 ஆயிரத்து 166 ஓட்டுகள் பெற்றார். 1 லட்சத்து 85 ஆயிரத்து 457 ஓட்டுகள் வித்தியாசத்தில் ஞானதிரவியம் வெற்றி பெற்றார்.

கோரிக்கைகள்

நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் நாடார், தேவர், ஆதிதிராவிடர், பிள்ளைமார் சமுதாயத்தினர் கணிசமாக உள்ளனர். யாதவர், பிராமணர் உள்ளிட்ட சமுதாயத்தினரும் குறிப்பிட்ட அளவில் இருக்கிறார்கள். பெருவாரியான இந்துக்களுக்கு அடுத்தபடியாக முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களும் கணிசமாக உள்ளனர்.நெல்லை தொகுதி மக்களின் முதன்மையான தொழில் விவசாயம் ஆகும். பெரும்பாலான விவசாயிகள் நெல், வாழை, தென்னை, உளுந்து, நிலக்கடலை, பருத்தி போன்றவற்றை பயிரிடுகின்றனர். பயிர் சாகுபடிக்கு தேவையான தண்ணீர் வழங்க வேண்டும் என்பதே விவசாயிகளின் ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது.

அணைகளில் உள்ள ஷட்டர்களை பழுது பார்க்க வேண்டும். அணைகள், குளங்களை தூர்வார வேண்டும். தாமிரபரணி ஆற்றை பாதுகாக்க வேண்டும். முக்கியமான இடங்களில் தடுப்பணை கட்ட வேண்டும். தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 90 சதவீத பணிகள் முடிந்த நிலையில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வெள்ளோட்டம் பார்க்கப்பட்ட வெள்ளநீர் கால்வாய் திட்டத்தை முழுமையாக நிறைவேற்றி தொடங்கி வைக்க வேண்டும்.

நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலம், கங்கைகொண்டான் தொழில்நுட்ப பூங்கா ஆகியவற்றை முழுமையாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இளைஞர்களுக்கு போதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும் வகையில் தொழிற்சாலைகள் உருவாக்க வேண்டும். பீடித் தொழிலாளர்களுக்கு உரிய சலுகைகள் கிடைக்க வேண்டும் என்பதும் தொகுதி மக்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பாக உள்ளது.

2019-ம் ஆண்டு தேர்தல் முடிவு எப்படி?

கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் நெல்லை தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஞானதிரவியம் வெற்றி பெற்றார். முதல் 5 இடங்களை பிடித்தவர்களின் வாக்குகள் விவரம் வருமாறு:-

ஞானதிரவியம் (தி.மு.க.) - 5,22,623

மனோஜ் பாண்டியன் (அ.தி.மு.க.) - 3,37,166

மைக்கேல் ராயப்பன் (அ.ம.மு.க.) - 62,209

சத்யா (நாம் தமிழர்) - 49,898

வெண்ணிமலை(மக்கள் நீதிமய்யம்) - 23,100

வாக்காளர்கள் விவரம்

கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் 16,50,532 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 8,06,096 பேரும், பெண் வாக்காளர்கள் 8,44,284 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 152 பேரும் உள்ளனர்.

சட்டமன்ற தொகுதிகள் வாரியாக வாக்காளர்கள்விவரம் வருமாறு:-

நெல்லை 3,02,180

பாளையங்கோட்டை 2,74,636

அம்பை 2,53,954

ஆலங்குளம் 2,60,813

நாங்குநேரி 2,92,536

ராதாபுரம் 2,66,413.

2021 சட்டமன்ற தேர்தல் முடிவுகள்

2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது, நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் இடம் பெற்றிருக்கும் 6 சட்டசபை தொகுதிகளில் கட்சிகளுக்கு கிடைத்த ஓட்டுகள் வருமாறு:-

நெல்லை (பா.ஜனதா வெற்றி)

நயினார் நாகேந்திரன்

(பா.ஜனதா) 92,282

ஏ.எல்.எஸ்.லட்சுமணன்

(தி.மு.க.) 69,175

சத்யா (நாம் தமிழர்) 19,162

மகேஷ் கண்ணன்

(அ.ம.மு.க.) 8,911

பாளையங்கோட்டை(தி.மு.க. வெற்றி)

அப்துல் வகாப் (தி.மு.க.) 89,117

ஜெரால்டு (அ.தி.மு.க.) 36,976

முகமது முபாரக் (எஸ்.டி.பி.ஐ.) 12,241

பாத்திமா (நாம்தமிழர்) 11,665

ஆலங்குளம் (அ.தி.மு.க. வெற்றி)

மனோஜ்பாண்டியன் (அ.தி.மு.க.) 74,153

பூங்கோதை (தி.மு.க.) 70,614

ஹரிநாடார் (சுயேச்சை) 37,727

சங்கீதா (நாம்தமிழர்) 12,519

அம்பை (அ.தி.மு.க. வெற்றி)

இசக்கி சுப்பையா (அ.தி.மு.க.) 85,211

ஆவுடையப்பன் (தி.மு.க.) 68,296

செண்பகவள்ளி (நாம் தமிழர்) 13,735

ராணி ரஞ்சிதம் (அ.ம.மு.க.) 4,194

நாங்குநேரி (காங்கிரஸ் வெற்றி)

ரூபி மனோகரன் (காங்கிரஸ்) 75,902

தச்சை கணேசராஜா (அ.தி.மு.க.) 59,416,

பரமசிவ அய்யப்பன் (அ.ம.மு.க.) 31,870

வீரபாண்டி (நாம் தமிழர்) 17,654

ராதாபுரம் (தி.மு.க.) வெற்றி

அப்பாவு (தி.மு.க.) 82,331

இன்பதுரை (அ.தி.மு.க.) 76,406

ஜேசுதாசன் (நாம் தமிழர்) 19,371

ஜெயபாலன் (தே.மு.தி.க.) 2,432.


Next Story