நாடாளுமன்ற தேர்தல்: தொகுதி கண்ணோட்டம்- நீலகிரி


நாடாளுமன்ற தேர்தல்:  தொகுதி கண்ணோட்டம்- நீலகிரி
x

நீலகிரி நாடாளுமன்ற தொகுதியின் பொருளாதாரமானது சுற்றுலா மற்றும் விவசாயத்தை சார்ந்தே உள்ளது.

ங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்தே சர்வதேச அளவில் புகழ் பெற்ற சுற்றுலா தலமாக நீலகிரி திகழ்ந்து வருகிறது. இதை தலைமையிடமாக கொண்டு உருவாக்கப்பட்ட நீலகிரி நாடாளுமன்ற தொகுதியானது ஊட்டி, குன்னூர், கூடலூர்(தனி), கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், தொண்டாமுத்தூர், திருப்பூர் மாவட்டம் அவினாசி(தனி) ஆகிய சட்டமன்ற தொகுதிகளை கொண்ட பொது தொகுதியாக இருந்தது. தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு தனி தொகுதியாக மாறியது. மேலும் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு பதிலாக ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டமன்ற தொகுதி இடம் பெற்றது.

தொடர்ந்து 4 முறை காங்கிரஸ் வெற்றி

நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு முதன் முறையாக 1957-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரசை சேர்ந்த சி.நஞ்சப்பா வெற்றி பெற்றார். 1962-ம் ஆண்டு காங்கிரசை சேர்ந்த அக்கம்மா தேவி, 1967-ம் ஆண்டு சுதந்திரா கட்சியை சேர்ந்த எம்.கே.நஞ்சா கவுடர், 1971-ம் ஆண்டு தி.மு.க.வை சேர்ந்த மாதா கவுடர், 1977-ம் ஆண்டு அ.தி.மு.க.வை சேர்ந்த ராமலிங்கம் வாகை சூடினர். 1980, 1984, 1989, 1991-ம் ஆண்டுகளில் காங்கிரசை சேர்ந்த ஆர்.பிரபு தொடர்ந்து 4 முறை வெற்றி பெற்றார்.

1996-ம் ஆண்டு த.மா.கா.வை சேர்ந்த எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம், 1998 மற்றும் 1999-ம் ஆண்டுகளில் பா.ஜனதாவை சேர்ந்த மாஸ்டர் மாதன், 2004-ம் ஆண்டு காங்கிரசை சேர்ந்த ஆர்.பிரபு, 2009-ம் ஆண்டு தி.மு.க.வை சேர்ந்த ஆ.ராசா, 2014-ம் ஆண்டு அ.தி.மு.க.வை சேர்ந்த சி.கோபாலகிருஷ்ணன் வாகை சூடினர்.

கடைசியாக நடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க.வை சேர்ந்த ஆ.ராசா தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் தியாகராஜனை 2,05,823 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அந்த தேர்தலில் 18 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் நோட்டாவுக்கு பதிவானது குறிப்பிடத்தக்கது.

சுற்றுலா, விவசாயம்

நீலகிரி நாடாளுமன்ற தொகுதியின் பொருளாதாரமானது சுற்றுலா மற்றும் விவசாயத்தை சார்ந்தே உள்ளது. இந்த தொகுதியில் இந்துக்கள் 80 சதவீதமும், முஸ்லிம்கள் 10 சதவீதமும், கிறிஸ்தவர்கள் 6 சதவீதமும், மற்ற மதத்தினர் 4 சதவீதமும் உள்ளனர். நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் ஊட்டி, குன்னூர், கூடலூர் சட்டமன்ற தொகுதிகளில் அதிகபட்சமாக படுகர் சமுதாயத்தினர் 30 சதவீதமும், ஆதிதிராவிடர் 20 சதவீதமும் உள்ளனர். மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் அதிகபட்சமாக ஒக்கலிக கவுடர் சமுதாயத்தினர் 50 சதவீதமும், ஆதிதிராவிடர்கள் 20 சதவீதமும் இருக்கின்றனர்.

இதுதவிர அவினாசி சட்டமன்ற தொகுதியில் அதிகபட்சமாக ஆதிதிராவிடர்கள், கொங்கு வேளாளர்கள், நாயக்கர்கள் உள்ளனர். மேலும் பவானிசாகர் சட்டமன்ற தொகுதியில் அதிகபட்சமாக கவுண்டர், நாடார், ஆதிதிராவிடர், மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர்.

மனித-வன விலங்கு மோதல்

இப்படி அனைத்து சமூக மக்களும் வாழும் நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்களும், தீர்வு காணப்பட வேண்டிய பிரச்சினைகளும் ஏராளமாக உள்ளன. அதில் முதலிடம் பிடிப்பது, நீலகிரி மாவட்டம் முழுவதும் பச்சை தேயிலைக்கு கட்டுப்படியாகும் வகையில், குறைந்தபட்ச விலை நிர்ணயிக்காததுதான். இது மட்டுமின்றி கூடலூரில் சட்டப்பிரிவு 17 வகை நிலப்பிரச்சினையும் இன்னும் தீர்க்கப்படாமலேயே இருக்கிறது. அங்கு அடிப்படை வசதிகள் கூட கிடைக்காமல், 20 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

ஊட்டியில் இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ்(எச்.பி.எப்.) தொழிற்சாலை மூடப்பட்டதால், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையிழந்தனர். ஆனால், அதற்கு மாற்றாக வேறொரு தொழிற்சாலை இதுவரை தொடங்கப்படவில்லை. வனப்பகுதிைய ஒட்டி உள்ள கிராமங்களில் மனித-வனவிலங்கு மோதல் தீர்க்கப்படாத பிரச்சினையில் முக்கியத்துவம் பெறுகிறது.

புறவழிச்சாலை

அதே நேரத்தில் பாண்டியாறு-புன்னம்புழா திட்டம், குந்தா நீர் மின் திட்டம் உள்ளிட்டவை கிடப்பில் போடப்பட்டு உள்ளது. திம்பம் மலைப்பாதையில் தொடரும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணப்படவில்லை. அவினாசியில் விசைத்தறி தொழில் முடங்கி கிடக்கிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு ரெயில் இயக்க வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கை நிலுவையில் உள்ளது. அங்கு அரசு ஆஸ்பத்திரியை தரம் உயர்த்த வேண்டும், சிறுமுகையில் ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. நீலகிரிக்கு செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், மேட்டுப்பாளையத்தில் புறவழிச்சாலை அமைக்க வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த கோரிக்கைகள் அனைத்தும் எப்போது நிறைவேற்றப்படும் என்பதே நீலகிரி நாடாளுமன்ற தொகுதி வாக்காளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

2019-ம் ஆண்டு தேர்தல் முடிவு எப்படி?

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஆ.ராசா வெற்றி பெற்றார். முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் விவரம் வருமாறு:-

ஆ.ராசா (தி.மு.க.) - 5,47,832 (வெற்றி)

தியாகராஜன் (அ.தி.மு.க.) - 3,42,009

ராஜேந்திரன் (மக்கள் நீதி மய்யம்) - 41,169

நோட்டா - 18,149

வெற்றி யார் கையில்?

நீலகிரி நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தவரை இந்த கட்சிக்குதான் வெற்றி என்று சொல்ல முடியாத அளவிற்கு அனைத்து கட்சிகளும் வெற்றி பெற்று உள்ளன. அதிகபட்சமாக காங்கிரஸ் 7 முறை வெற்றி பெற்று உள்ளது. தேசிய கட்சியான பா.ஜனதா 2 முறை வெற்றி பெற்று இருந்தாலும், கடைசி 3 தேர்தலிலும் மாநில கட்சிகள் வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்துகின்றன.

இந்த தேர்தலில் தி.மு.க. சார்பில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, அ.தி.மு.க. சார்பில் முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன், பா.ஜனதா சார்பில் மத்திய மந்திரி எல்.முருகன் போட்டியிடுவதால், இந்த தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளது. நாம் தமிழர் கட்சி சார்பில் விவசாயியான ஜெயக்குமார் களமிறங்கியுள்ளார்.

தற்போதைய நீலகிரி எம்.பி.யான ஆ.ராசா, பொதுக்கூட்டங்களில் புள்ளி விவரங்களுடன் அனல் பறக்க பேச கூடியவர். அவருக்கு சவால் கொடுக்க அ.தி.மு.க., பா.ஜனதா, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் தயாராக உள்ளனர். இதனால் நீலகிரி நாடாளுமன்ற தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவுகிறது. இதன் காரணமாக குளுகுளு காலநிலை கொண்ட இந்த தொகுதி தற்போது சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.


Next Story